பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்

119


என்பார் ஆங்கிலத்தில் பாராட்டிப் பாடியிருப்பது அவரது புகழை மேலோங்கச் செய்யும் என்பது உறுதி. அப்பாட்டின் அடிகள், அவர் புகழேந்தியாரை எவ்வளவு உச்சத்தில் வைத்துப் போற்றுகின்றார் என்பதைத் தெளிவுபட விளக்குகின்றன.

புகழேந்தியார் தம்முடைய பாடல்களின் மூலம் பயில்வாரை எத்தனை இனிமையான உலகுக்கு அழைத்துச் செல்கின்றார்! அவர் வெண்பாவின் நடையும், பொருளழகும், உவமை முதலிய பிற நல்லியல்புகளும் பயில் வோரைப் பற்றி யீர்ப்பன அல்லவோ? இத்துணை அழகிய வகையில் அவர் பாட்டிசைத்தும், ‘வெண்பாவிற் புகழேந்தி’ எனச் சிறப்புச் செய்யப் பெற்றும், அவரைப் பற்றி இக்காலப் புலவர்கள் அதிகமாகப் பேசுவதில்லை. காரணம் என்னவோ, விளங்கவில்லை! எனினும், கல்கத்தாவில் உள்ள நீங்கள் அவரைப் பற்றியும், அவர் நூல் பற்றியும் அறிய விரும்பி அவர் ஏற்றத்தைப் போற்றுகின்றீர்கள். ஆகவே, உங்கள் விழைவின் வழி அவரைப் பற்றியும் அவர் பாட்டினைப் பற்றியும் இன்று உங்கள் முன் பேசுகின்றேன். அவர் என்றும் அழியாத அமர கவினார். அவரைப்பற்றி அறிதல் தமிழ் அறிவினில் ஒருபடி முன்னேறியதாக அன்றோ முடியும்!

புகழேந்தியார் தொண்டை நாட்டுப் புலவர்; பொன் விளைந்த களத்தூரில் பிறந்தவர். ‘மாலார் களந்தைப் புகழேந்தியும் தொண்டை மண்டலமே,’ என்று தொண்டைமண்டல சதகம் அவரையும் அவர் ஊரையும் இணைத்துப் பாடுகின்றது. அவர் வேளாண் மரபினர் என்பது தெரிகின்றது. எப்படி அவர் இயற்பெயர் தெரியவில்லையோ அப்படியே அவருடைய பெற்றோர் முதலிய வரைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. இப்படிப் பேரும் குலமும் தெரியாதிருப்பதுகூட ஒரு வகையில் இன்று நல்லது என்று படுகின்றது. சாதிப்பித்தும் பிறபித்துக்களும் மிக்குள்ள இந்தக் காலத்தில் தம் சாதிப் புலவர் எதைச் சொன்னாலும் போற்றுவதும், அல்லார் எத்துணைச் சிறந்த