பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கங்கை கரையில் காவிரித் தமிழ்


கருத்துக்களைக் கூறினாலும் இகழ்வதுமாகிய ஒருநிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. உரிமை பெற்ற இந்திய நாடு சாதி மத வேறுபாடற்ற சமுதாயமாக இயங்குகின்றது என்பது ஏட்டளவிலேதான் உள்ளது. ஆனால், இன்று நாட்டில் கட்சி வெறியும், சாதி வெறியும் எல்லை மீறித் தாண்டவமாடுகின்றன என்னலாம். அந்த வெறி உண்மையை மறைக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. தன் சாதியில் உள்ளவனோ, கட்சியைச் சேர்ந்தவனோ என்ன சொன்னாலும்—அவன் சொல் மிக மட்டமானதாக இருந்தாலும்—சீர்தூக்கிப் பாராட்டிப் போற்றுவதைக் காண்கின்றோம். அதே வேளையில் மற்றொரு சாதியையோ கட்சியையோ சேர்ந்த ஒருவன் உண்மையை உருக்கமாக எடுத்துரைத்த போதிலும் அதன் நலங்கேடுகளை ஆராயாத துடன் அதைக் காதில் வாங்கவும் விரும்புவதில்லை. இத்தகைய அநாகரிக உலகத்தில் ஊர்பேர் அறியும் வகையில் வள்ளுவரும் பிற புலவர்களும் பிறந்த ஊரும் குலமும் தெரிந்திருந்தால் இந்நேரம் புதைக்கப்பட்டிருப்பார்களோ என அஞ்சுகின்றேன். புகழேந்தியாரின் ஊரும் குலமும் ஒருவாறு தெரிந்தமைதான் அவர் பாடல் போற்றப்படாமைக்குக் காரணமோ என்றுகூட எண்ணுகின்றேன்! எப்படியாயினும், உங்கள் விருப்பம் அவர் கவி நலம் காணவேண்டுமென்பது. எனவே, நான் உங்கள் விருப்பின் வழி என் கடமையைச் செய்கின்றேன்.

புகழேந்தியார் நளன் சரித்திரத்தை வெண்பாவால் பாடியுள்ளார். நளன் சரிதத்துக்கு மூலம் வடமொழிக் காவியம், கதையும் வடநாட்டைப் பற்றியதே. சிறக்க வாழ்ந்த நிடத மன்னன் நளன், அன்னத்தால் தமயந்தி யின் சிறப்பறிந்து மணந்துகொண்டு வாழ்ந்து, மக்கள் இருவரைப் பெற்று, பின் கலியால் நாடிழந்து, காட்டில் வாழ்ந்து, பின்னர் மனைவி மக்களையும் பிரிந்து, இருதுபன்னனுக்குப் பணியாளாகி, இறுதியில் கலி நீங்கப்பெற்று, மனைவி மக்களை அடைந்து, இழந்த நாட்டையும் மீட்டு. ஆட்சி புரிந்த வரலாற்றை விளக்குவதுதான் இந்நூல்