பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


வும், மக்கட் பாசமும் பிறவும் மனிதனை எவ்வாறு ஆட்கொள்கின்றன எனவும் பலப்பல உண்மைகளைப் பலப்பல வகையாய் எடுத்துக் காட்டியுள்ளார் புலவர். மேலும், கவிதைக்கே இயல்பாயமைந்த இயற்கை வருணனை. பொழுதுகளின் தோற்ற ஒடுக்கங்கள் பற்றிய காட்சி வருணனை ஆகியவற்றையும் சிறக்கக் காட்டியுள்ளார். அனைத்தினுக்கும் மேலாகத் தம்மை ஆதரித்த ‘சந்திரன் சுவர்க்கி’ என்ற மன்னனைப் போற்றி, இடையிடையே அவனைப் பற்றிக் குறித்துத் தம் நன்றி அறிதலைக் காட்டுகின்றார் புலவர். இவ்வாறு பல வகையிலும் உயர்ந்த பாவின் பண்பில் ஒரு சில எடுத்து ஆய்ந்து இன்றைய பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.

புகழேந்தியார் தொண்டை நாட்டில் பிறந்து பாண்டியன் அவைக்களப் புலவராகி, சோழன் அவையை அலங்கரித்தவர் என்றாலும், நளவெண்பாவைப் பாடும் காலத்து அவர் சந்திரன் சுவர்க்கி என்ற வள்ளலைச் சார்ந்து இருந்தவர் என்பது தெளிவாகின்றது. அவன் ஒரு சிற்றரசனாய் இருந்திருக்க வேண்டும். அவனிடம் அவர் உளம் கலந்து பழகியவராதல் வேண்டும். தம் பாடலுள் அவனைப் பற்றியும், அவன் கொடை வீரம் ஆகியவை பற்றியும் பலபடியாகப் புகழ்ந்துள்ளனர்.

சந்திரன் சுவர்க்கி மனு நீதி தவறாது ஆண்டவன் என்கின்றார் அவர். மனு வேந்தன் சிறப்பினை மேல் சேக்கிழார் வாக்கில் கண்டோம். இறந்த பசுவின் கன்றுக்கு மாறாகத் தன் ஒரே மைந்தனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று அறம் காத்த அண்ணல் மனுச்சோழன் என்பதை அறிவோம். சந்திரன் சுவர்க்கி அதே நிலையில் நாட்டை அறம் தவறாது ஆண்டவன் என்கின்றார் புகழேந்தியார். அந்த வேந்தன் தலை நகர் ‘முரணை’ என்பதாகும். நளனது மாவிந்த நகரத்தைப் பாராட்டிப் பாட வந்த புகழேந்தியார் அந்நகர் தம்மை ஆதரித்த வள்ளலின் தலை நகரைப் போன்று இருந்தது எனக் கூறுகின்றார். இதோ அவர் பாட்டு: