பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்

125


விரும்புகின்றார் புலவர். இந்திரன் வாக்கிலே நளன் பெருமையைக் கூறுமுகத்தான் அரசர் மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் பண்புகளையும் காட்டுகின்றார்.

‘வாய்மையும் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள் வலியும்—பூமான்
நெடுங்கற்பும் மற்றவர்க்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தான் ஆங்கு.’ (168)

என்று வச்சிரத்தானாகிய இந்திரன் கலி மகனுக்குக் கூறிய கூற்றாக விளக்கிப் போந்தார். மக்களும் தேவரும் மட்டுமன்றிப் புள்ளும் விலங்குக்கூட நளன் பெருமையைப் பாராட்டுகின்றன போலும்! மடவன்னம் அந்நளன் பெருமையைத் தமயந்திக்கு எடுத்துரைப்பதன் மூலம் பறவை இனமும், மன்னர் வாழ்வு இப்படி அமைய வேண்டும் என வகுத்துரைத்ததைக் காட்டுகின்றார். தன் வாழ்வளித்த நளனுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடித்தர விரும்பிய அந்த அன்னம், தமயந்தியைப் பற்றிக் கூறி, அவளை அவனுக்கு மணம் முடித்துத் தருவதாக வாக்களித்து, அங்கிருந்து பறந்து சென்று, தமயந்தியை அணுகி, அவளிடம் நளன் பெருமையை எடுத்துரைத்தது.

செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான்
                                                         மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்—மெய்ம்மை
நளன் என்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்’ (53)

என்றும்,

‘அறங்கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும்
மறம்கிடந்த திண்தோள் வலியும்’ (54)

உடையவன் என்றும் அழகாக எடுத்துக் காட்டும் முறை எண்ணற்பாலதன்றோ! இவ்வாறு மக்கள் மட்டுமன்றி விண்ணவரும் விலங்கும் பறவையினமுங்கூடப் பாராட்-