பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்

127


என்றும் இன்னும் பல வகையிலும் அவளது உடலழகையும் உள்ளப் பொலிவையும் காட்டிக் கற்புடைப் பெண்கள் இத்தகையர் என எடுத்து விளக்கியுள்ளார் புலவர் இனி அத்தமயந்தியின் வழியே மக்கள் மேற்கொள்ள வேண்டிய இல்லற வாழ்வையும், காதல் வாழ்வையும், பிரிந்து ஆற்றாத பெருநெறியையும் நூல் முழுவதும் விளக்கிக்கொண்டே செல்கின்றார் புலவர்.

நளனும் தமயந்தியும் இளநிலா எழில் நலம் கலந்த மாலைப்பொழுதில் எக்கரில் தனித்துச் சாய்ந்து பலப்பல பேசிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண வாழ்வில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சிதானே இது? இந்தக் காதல் காட்சியைப் புலவர் காட்டுகின்றார்; மணல் மேட்டையே படுக்கையாக்கி விட்டார். பின் வேறு என்ன தேவை? இதோ அவர் பாடல்:

‘ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்
தோற்ற அமளிஎனத் தோன்றுமால்—காற்றசைப்ப
உக்க மலரோடு உகுத்தவளை மூத்தமே

எக்கர் மணல்மேல் இசைந்து.’

என்று பாடும்போது அவ்வியற்கை நலம் எத்துணை ஏற்றம் பெற்றுச் சிறக்கின்றது! இவ்வாறே தமிழ் நாட்டுச் சிறந்த ஒழுக்கமாகிய காதல் இன்பத்தை எத்தனையோ வகையில் காட்டிச் செல்வதைக் காணல் முடியும். வாய்ப்புள்ள காலத்து நூல் வழிச்சென்று கண்டுகொள்க எனக் கூறி மேலே செல்லுகின்றேன்.

பிற தமிழ்ப் புலவர்களைப் போன்று புகழேந்தியாரும் இயற்கையைப் பாடும் நல்ல பண்பட்ட புலவராகவே விளங்குகிறார், ‘காமர் கயல் புரள’ என்ற முதற் பாட்டுத் தொடங்கி, நூலின் இறுதி வரையிலும் இந்த இயற்கையின் எழிற்காட்சி விட்டு விட்டுத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. மாலைக் காலம் வருவதைப் பல புலவர்கள்