பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


கொள்ள முடியவில்லை. அதைக் காணவேதான் இன்று உன்னைப் பிடித்தேன். ஆகவே, நீ அஞ்சவேண்டா!’ என்று கூறினான் நளன். அவன் சொல் கேட்டு அன்னம் உளத்தடுமாற்றம் நீங்கியதோடன்றி, அவனோடு என்றென்றும் வாழும் காதலியையே தேடித் தந்துவிட்டது.

இவ்வாறு இயற்கைப் பொருள்கள் மட்டுமின்றி எல்லாவற்றையும் ஏற்றமுற எடுத்துக்காட்டும் நல்லியல்பைப் புலவர் பெற்றிருந்தார் என்பது நன்கு புலனாகின்றது. அந்த மாவிந்த நகரத்தில் மக்கள் அறம்பிறழா நெறியில் வாழ்ந்தார்கள் என்பதை,

‘வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட்டு அரற்றுவன—கஞ்சம்
கலங்குவன மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.’ (22)

என்று காட்டும் வகை அறிந்து மகிழத்தக்கதுதானே!

புலவருடைய திறம் அவர் உவமையை விளக்கும் வகையில் சிறந்து அமைவதாகும். இன்று தமிழ் நாட்டு அணியியலில் எத்தனையோ புதுப்புதுப் பெயர்கள் வருவதைக் காண்கின்றோம். ஆனால், மிகப் பழமையாகத் தொல்காப்பியத்தில் போற்றப்படுவது உவமை அணி ஒன்றே தான். அந்த உவமையே புலவர் தம் புகழை மேன்மேலும் சிறந்து ஓங்கவைக்கிறது. புகழேந்தியாரும் அந்தத் துறையில் சற்றும் பின் அடைந்தவரல்லர். அவர் தம் உவமை நலம் நூல் முழுதும் நிறைந்து, பாட்டிலேயே ஒரு தனிச் சுவையை உண்டாக்கித் தருகின்றது. இரண்டொன்று கண்டு மேலே செல்வோம்.

தமயந்தி தன் சுயம்வர மண்டபத்துக்கு மன்னர் நடுவில் வந்து புகுகின்றாள். மன்னர்தம் கண்களெல்லாம் அவளையே நோக்கி நின்றன. அவரவர் கண்களிலும் அவள் தோற்றம் பிரதிபலிக்கின்றது. அனைவரும் அவளை