பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழேந்தியார்

133


தீமையே கொண்ட சிறுதொழிலாய்! எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.’ (394)

என்று கூறும்போது அவர்தம் உளவுரனும், அவர் தம் தந்தையின்பால் கொண்ட பற்றும் புலப்படுகின்றனவே!

‘மன்னர் பெருமை மடையர் அறிவரோ?
உன்னை அறியாது உரைசெய்த—என்னை
முனிந்தருளல் என்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.’ (396)

என்று நளன் கூறும்போது நம் உளம் நைகின்றது. பின் அவன் உருவெளிப்பட்டு, மக்களையும் மனைவியையும் கண்டு நிற்கும் காட்சியைப் புலவர் காட்டும் போது நம் கண்ணீர் மேலே பாட்டைப் படிக்க முடியாமல் செய்யும் என்பது உறுதி. தமயந்தியின் கண்ணீர் அவள் கண் நளனைக் காணாமல் மறைத்து மூடியது என்கிறார் புலவர். ‘விழியிரண்டும் மன்னவனைக் காணாமல் நீரால் மறைந் தன,’ என்கின்றார். நாமும் அந்நிலையிலேயே நிற்கின்றோம். இவ்வாறு பல வகைகளில் நம்மை நாம் மறக்கும் வகையில் புகழேந்தியார் நம்மைத் தம் நூல்வழி அழைத்துச் செல்வர். அரசர் மேலும் மற்றவர் மேலும் வைத்து மாநில வாழ்வு நடக்கவேண்டிய வகையினையும், அவ்வாழ்க்கை நெறி பிழைப்பார் பெறும் இன்னலையும், இறுதியில் அறத்தாறு வாழ்வார் இன்பம் பெறுவர் என்ற முடிவினையும் கதைப் போக்குக்கு இடையிலே வைத்து அவர் எடுத்துக் காட்டும் திறன் எண்ணத்தக்கது. தமிழ்ப்பாவால் புகழ் ஏந்தி நின்ற அப்புலவர் பாடல் வழி நின்றால் நாம் நேரம் செல்வதை அறியாமல் நிலைத்து நின்றுவிடுவோம். இன்னும் இந்நூலின் நலம் பற்றியும் நயம்பற்றியும் எத்தனையோ பேசலாம். கால எல்லைக்குக் கட்டுப்பட்டவர் நாம் என்ற நினைவின்படியும் முறையின்படியும் மேலும் நீட்டாது இந்த அளவில் இன்றைய பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன்.