பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


தாம் அவன் ஆகும் ஒருமை உணர்வு பெற்றார். ‘நீ வேறெனா திருக்க, நான் வேறெனா திருக்க, நேராக வாழ்வதற்கு’ வேண்டிய வரம் பெற்றவரானார். அவர் உண்டால் தாம் உண்பது என்ற அளவுக்கு அவர் ஒருமை உணர்வு உரம் பெற்றது. இவ்வாறு ஒருமை உணர்வு பெற்ற அடியவர் நிலையைத் திருநாவுக்கரசர்,

‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
        மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
        பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
        அகன்றாள் அகலிடத்தார் அசா ரத்தைத்
தன்னை மறத் தாள் தன் நாமம் கெட்டாள்
        தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.’

என்று அழகாகக் காட்டுகின்றார். அவ்வாறே கண்ணப்பரும் தம்மை மறந்தார்; அவனானார். அந்த ஒருமை உணர்வைத்தான் சுந்தரர் கலை உணர்வு என்று காட்டுகின்றார். ஒருமை உணர்வு பெற்ற நல்ல உள்ளத்தில் கலை உணர்வும், கவி நலமும் பாரதியார் காட்டியது போலப் பெருக்கெடுக்கும் என்பது ஒருதலையன்றோ?

இனி, அக்கலை, வாழ்வொடு எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பார்ப்போம்: வாழ்வெனப்படுவது யாது? வெறுங் கற்பனை உலகில் சஞ்சரிப்பது வாழ்வாகுமா? இல்லவே இல்லை. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார்,’ என்ற வள்ளுவர் வாய் மொழிப்படி உலகத்தோடு ஒட்டி வாழ்பவன் காண்பதே கல்வி. அதுவே கலையாகும் என்னலாம். மக்கள் வாழ்வோடு பிணைந்த கலை அத்தனையும் வாழத்