பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே வாழ்ந்த பாரதியாரை முன்னிறுத்தி, அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த இலக்கியப் புலவர்களையும், கவிஞர்களையும் கண்டு, அவர் நூல்வழிச் சிலர் ஆராய்ச்சி செய்கின்றனர். அந்தத் துறை யில் இந்நாள் பேச்சு, ‘பாரதியாருக்குப் பின்’ என்று அமைகின்றது. வழிவழியாக வளர்ந்து வந்த தமிழ் இலக்கியம் பாரதியாருக்குப் பின்னும் வளர்ந்து வருகின்றதா, அல்லது அவரோடு தமிழ் இலக்கியமும் வளர்ச்சி குன்றி மறைந்துவிட்டதா என்று ஆராய்தல் இன்றைய பேச்சின் கருத்தாகும். எனது கருத்து, தமிழ் இலக்கியம் பாரதியாருக்குப் பின்னும் வளர்ந்து வருகின்றது என்பதுதான். ஒரு சிலர், ‘பாரதியாருக்குப்பின் தமிழ் இலக்கிய உலகம் ஸ்தம்பித்து விட்டது; அதன்வளர்ச்சி அன்றோடு நின்றுவிட்டது. இன்றுவரை, அவர் மறைவுக்குப் பிறகு ஒரு புலவனும் தோன்றவில்லை. இனித் தோன்றுவானோ என்னவோ!’ என்று நினைக்கின்றார்கள்; பேசுகின்றார்கள். ஆனால், அவ்வாறு நினைப்பது அத்துணைச் சிறந்த ஒன்றன்று என்பது என் கருத்து. அந்த நினைப்பு, தமிழை வாழ வைக்காததென்றுங்கூடக் கூறுவேன். எந்த மொழியும் ஓர் எல்லையில் நின்று தன் இலக்கிய வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமானால், அது செத்த ஒன்றாகிவிடுமேயன்றி, வாழ்வதாகாது. உலகம் தோன்றிய நாள் தொட்டு இன்று வரை அது போன்று தோன்றி வாழ்ந்த மொழிகள் எத்தனையோ இருக்கலாம். ஆனால், நம் தமிழ் மொழி அந்த நிலையில் இல்லை. அது என்றும் வளரும் மொழியாகவே உள்ளது. சங்ககாலப் புலவர்கள், வள்ளுவர், கம்பர் போன்ற பெரும்புலவர்களோடு அது நிற்கவில்லை. அப்படியிருக்க, பாவம், பாரதியார் அதற்கு எப்படி முட்டுக்கட்டையாக இருந்து முற்றுப்புள்ளி வைக்க முடியும்? என்னைக் கேட்டால், அதற்கு நேர்மாறாக அவர் தமக்குப் பின் தமிழ் இலக்கியம் வளர எத்தனையோ பேரை விட்டுச் சென்றார் என்று கூறுவேன். இன்றும் பல நல்ல கவிஞர்கள், எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பாரதியார்