பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்

137


தமிழ் இலக்கிய வளர்ச்சியின் திருப்பு மையமாய் இருந்து அவ் வளர்ச்சியை மெருகிட்டுப் புதுமுறையில் செலுத்தினார். அந்தப் பாதையில் இன்று எத்தனையோ புலவர் பணி செய்கின்றார்கள். ஆகவே, பாரதியாருக்குப் பின் தமிழ் இலக்கியம் தடுத்து நிறுத்தப் பெறாது தளராது வளர்ந்து கொண்டேதான் வருகின்றது என்பதே என் முடிந்த முடிபாகும்.

‘பாரதியார் அப்படி என்ன புதுமையைத் தமிழ் இலக் கியத்தில் புகுத்திவிட்டார்?’ என்று சிலர் கேட்கலாம். வாழ்ந்த அந்தக் காலத்து அவரை வாட விட்ட தமிழகம், அவர் இறந்த பிறகு அவருக்கு மண்டபம் கட்டிக் களிக் கிறது. அதைப்போன்றே அவர் வாழ்ந்த காலத்தில், ‘அவர் பாடல்கள் இலக்கண வரம்பற்றவை; தமிழ்ப்பாடல் என்னத் தகுதியற்றவை,’ என்று பேசிய நாக்கெல்லாம் இன்று அவர் பாடல்களைப் புகழ்கின்றன. ஆகவே, காலத்தால் அழியாத வாழ்வொடு பிணைந்த கவிதைகளைப் புனைந்து அவரும் சாகாவரம் பெற்றுவிட்டார். அவரைப் புரட்சிக் கவிஞர் என்பர் சிலர். ஆம். அவர் செய்த புரட்சி என்ன?

‘காரிகையை ஒட்டித்தான் கவி பாட வேண்டும்,’ என்ற சில புலவர் கருத்தை அவர் வெட்டி எறிந்தார். இலக்கியத்துக்கு இலக்கணமேயன்றி, இலக்கணப்படி இலக்கியம் எழுதுதல் இயலாது என்பது உலகறிந்த உண்மை ‘காரிகை கற்றுக் கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே.’ என்ற தொடரும் இது பற்றி எழுந்த ஒன்றே. ஆகவே, உள்ளத்து உண்மை ஒளி, உதட்டில் பாட்டாக உருப்பெற்று, வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடுவதுதான் கவியின் இயற்கை நிலை. பாரதியார் அத்தகைய இயற்கைக் கவிஞர். அவர் உளம் குளிர்ந்தபோதெலாம் உவந்து வந்து பாடினார். அத்துடன் வேற்று நாட்டார் நம் மண்ணில் இழைத்த கொடுமைகளையெல்லாம் கண்டு உளம் கொதித்த போதிலும், உலையாது, உரம் உண்டாக்கி