பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாருக்குப் பின்

139


என்னலாம். கவிஞர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் இந்திய அரசாங்கம், சென்னை அரசாங்கம் ஆகிய இரண்டிலும் போற்றப் பெறுகின்றனர். புத்தம் புதிய நூல்களுக்குள் நல்லனவற்றை ஆய்ந்தெடுத்து ஆண்டுதோறும் பரிசளித்துக் கலையையும் இலக்கியத்தையும் வளர்த்து வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழ் இலக்கியம் வளர்ந்து கொண்டேதான் வருகின்றது. இத்துடன் பாரதியாரின் காலத்தை ஒட்டி அவரோடு வாழ்ந்து வரும் வழியை மறவாது போற்றிப் புதுமை இலக்கியங்களைத் தோற்றுவித்து வளர்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். அவருள்ளே மூவர் சிறந்தவராகப் போற்றப்படுகின்றனர், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களும், பாரதிதாசன் கனக-சுப்புரத்தினம் அவர்களும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் ஆகிய மூவரையுமே நான் குறித்தேன். இம்மூவருள் அண்மையில் கவிமணி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார்கள். மற்றவர்கள் இன்னும் நம்முடன் வாழ்கின்றார்கள்.

பாரதிதாசன், புதுவையில் பாரதியார் வாழ்ந்த காலத்து அவருடன் இருந்து அவர் ‘பாடு’ எனப் பாட்டிசைத்த புலவராவர்; அவரொடு பழகி, அவர் செல்லும் நெறியில் தம் கவிகளை எழுதியவர். ஆசிரியருடைய பாடலினும் விஞ்சிய வகையில்—புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் என்று அறிந்து கொள்ளும் வகையில்—அவர் பாடல்கள் விளங்குகின்றன. வாழ்வாங்கு மனிதன் வாழ வேண்டிய பல கருத்துக்கள் அவர் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப்போக வேண்டும்,’ என்ற பாரதியாரின் சொல்லின் படி அவரும் பயனற்ற-பொருளற்ற பல கண் மூடி வழக்கங்களைக் கண்டித்துப் பாடியிருக்கிறார். அத்தகைய பாடல்கள் அவர் புகழை உலகுக்கு நன்கு எடுத்துக் காட்டின. பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் தாலாட்டுப் பாடல்களிலே நாட்டில் மூடப் பழக்கங்கள் மலிந்துள்ளதையும், அவற்றைக் கண்டு நாம் நாண-