பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

9


தான் செய்கின்றன. கோயில்களின் கோபுரத்தில் சிற்பக் கலை என்று செதுக்கும் கலை வாழ்வொடு பொருந்தியிருப்பதைக் காணலாம். சிலர், ‘கோயில் கோபுரத்திலா இக் கலை வேலை எல்லாம்!’ என்றுகூட எண்ணுவர். எனினும், அதில் உள்ள அந்த வாழ்வுக் கலைகளே அக்கோபுரத்தை வாழ வைக்கின்றன என்னலாம். அதைப் போன்றே காவியத்திலும் வாழ்க்கை பிணைக்கப்பட்டிருப்பதுதான் கலையாய் வாழ்கின்றது. சிலர் ‘வாழ்க்கை வேறு; கலை வேறு’ என்று வாதிப்பர். ஆனால், உண்மைக்கலை. வாழ்வொடு பிணைந்த ஒன்றேயாகும். நமது அன்றாட வாழ்வில் கலை காட்சி தருகின்றது. ஏன்—நம்மை அன்றாடம் வாழ வைப்பதே கலைதான். ஆனால், அந்த உண்மையை உணர்ந்தவர் மிகமிகச் சிலரேயாவர்.

‘கலை வாழ்வொடு பிணைந்ததாயின் அது வாழ்வை வளமாக்குமா?’ என்று கேட்கத் தோன்றும் சிலருக்கு. அதற்குச் சான்றாகச் சில வாழ்விழந்த கலைஞர்களையும் எடுத்துக் காட்டுவர். உண்மையில் ஆராய்ந்தால் அவர் தம் சான்றுகள் அவர் கருத்துக்கு மறுதலையாகவே அமையும் என்னலாம். கலைஞர்களுள் சிலர் வாழ்வில் ஏழையராய் வாழ்கின்றனர் என்பது உண்மைதான். அதனால், கலைதான் வறுமை உண்டாக்கிற்று என்று கூற முடியுமா? கல்விக் கலையையும் செல்வத்தையும் சேர்த்துப் பாடிய இடைக்காலப்புலவர் ஒருவர், இரண்டும் ஓரிடத்தில் இணைந்திருக்க, முடியாது என்றே கூறியுள்ளார்; ‘நாவின் கிழத்தி யுறைத லால் சேராளே, பூவின் கிழத்தி புலந்து,’ என்றுகூடப் பாடியுள்ளார். ஆனால், பாவம் அவர் உண்மையை உணராது கூறிவிட்டாரோ என்று வருந்த வேண்டியுள்ளது. செல்வம் இருப்பதால் கல்வியோ, கல்வி இருப்பதால் செல்வமோ சேராது நீங்குதலில்லை. கல்வி நலம் கண்ட