பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘உள்ளத்தில் உள்ளான் அடி—அதுநீ
        உணர வேண்டும்அடி
உள்ளத்தில் காண்பாயெனில்—கோயில்
        உள்ளேயும் காண்பாயடி.’

என்று பாடும் திறன் நம் உள்ளத்தைத் திறக்கின்றதன்றோ? இப்பாடலைப் படிக்கும் போது,

‘குறிக ளும்அடை யாளமும் கோவிலும்
நெறிக ளும்அவர் நின்றதோர் நீர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியிலீர்! மனம் என்கொல் புகாததே?’

என்றும்,

‘கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு நீர்க்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.’

என்றும் பாடிய ஏழாம் நூற்றாண்டின் தெய்வப் புரட்சிக் கவிஞராகிய திருநாவுக்கரசர் பாடல்கள் நம் நினைவுக்கு வருகின்றனவே! ஆம்! கடவுள் நெறி கருத்தில் உருவாகும் ஒன்றன்றோ?

பெண்கள் உரிமையைப் பற்றிப் பாரதிதாசன் சுட்டிய அடியினை மேலே குறித்தேன். கவிமணி அப்பெண் பிறவியே சிறந்ததென்பதை,

‘மங்கைய ராகப் பிறப்பதற்கே—நல்ல
        மாதவம் செய்திட வேண்டு மம்மா!’

என்று காட்டி, அம்மங்கை நல்லார் மாநில மக்கள் சமுதாயத்துக்குச் செய்துள்ள தொண்டுகளையெல்லாம் தொகுத்துக் கூறுகின்ற திறன் வியத்தற்குரியதாகும்.

‘அன்பினுக் காகவே வாழ்பவர் யார்?—அன்பில்
        ஆவியும் போக்கத் துணிபவர் யார்?
இன்ப உரைகள் தருபவர் யார்?—வீட்டை
        இன்னகை யால்ஒளி செய்பவர் யார்?’

10