பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்



என்று வினா எழுப்பி, இவ்வாறு மக்கள் இனத்துக்கே அவர் செய்யும் சிறப்பினை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் காட்டி, ‘ஆகவே, மங்கையராகப் பிறப்பதனால் மனம் தளர்ந்து வாடல் வேண்டா’ என்று அறிவுறுத்தி என்றும் உலகம் இன்பில் வாழ், மக்கள் வாழ்வு மலர வழி காட்டும் பெண்களைப் போற்றுகின்றார் அவர்.

இன்று பெரும் பேச்சாக இருக்கும் தீண்டாதார் பிரச்சினையை அவர் கேள்வி கேட்கும் வாயிலாகவே காட்டி அத்தீண்டாமை நீக்க வேண்டுவது எத்துணை அவசியம் என்பதை வலியுறுத்துகின்றார்.

காப்பாற்றி நமையாளும் கடவுளரும் மக்களுள்ளே
பார்ப்பார்கள் பறையரென்ற பகுப்போதும் வைத்ததுண்டோ?
பாவிகளை ஈடேற்றிப் பதம்அளிக்கும் பரமசிவம்
கோவிலிலே எமைக்கண்டால் குடிமுழுகிப் போயிடுமோ?
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்அளிக்கும் கண்ணுதலை
வீணாக மூடிவைத்து விளங்காமற் செயலாமோ?

என்ற கவிமணியின் வினாக்களுக்குப் பதில் கூற முடியுமோ?”

இவ்வாறே கவிமணியின் பாடல்களின் நலன்களையெல்லாம் கண்டுகொண்டு நெடுநேரம் இருக்கலாம் எனினும், கால எல்லைக்குக் கட்டுப்பட்டவர்கள் நாம். ஆகவே, இந்த அளவில் அவர் கவிதை பற்றிப் பேசுவதை நிறுத்தி, மேல் இன்று தமிழ் நாட்டில், பாரதியாருக்குப்பின், கவிதை, உரைநடை இருவழியிலும் தமிழ் இலக்கியம் எத்துணை வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைக் காட்டி விடை பெறுகின்றேன்.

கவிதை உலகில் மூன்று சிறந்தவர்களைக் கண்டோம். எத்தனையோ பேர்கள் கவிதைகள் எழுதுகின்றார்கள். எல்லாக் கவிதைகளுமே சிறந்தன என்று நான் கூறமாட்டேன். தோன்றுமுன் கருவிலேயே அழியக்கூடிய கவிதைகளும், காலை தோன்றி மாலை மறையும்