பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


அவ்வண்டுக்கு உணவாகவும் அமைந்த பொருளன்றோ? அவ்வாறு இனிய உணவாகிய தேன் உண்ணுவதை விட்டு வண்டுகள் அவன் தேரின் மணி ஒலி கேட்டுப் பயந்து பறந்து சென்றன; அதைக் கண்டான் காதலன். கார் காலத்துக்கு முன் சென்று வாடும் தலைவியின் வாட்டம் தீர்க்கவேண்டும் என்று எண்ணிய எண்ணத்தை மறந்தான்; விரைந்து தலைவியைக் காணவேண்டும் என்ற தன் எண்ணத்தையும் ஆசையையும் துறந்தான்; அவ் வண்டுகளின் களிமகிழ்வைக் கலைக்கக் கூடாது என்று கருதினான். உடனே பாகனை அழைத்துத் தேரை நிறுத்தச் சொன்னான். தேர் நின்றது. அதில் அசையும் மணிகளின் நாவைப் பிடித்துப் பிணிக்கச் சொன்னான். மணியின் நாக்கள் பிணிப்பட்டன. பிறகும் ஓசை எழும்புமோ? இல்லை. பின் தேரினை விரைந்து செலுத்தச் சொன்னான். தேர் சென்றது. ஓசையில்லை. எனவே, வண்டுகளின் அச்சமும் இல்லையாயிற்று. இக்கலை உள்ளத்தை அகநானூற்று நான்காவது பாடல்,

‘பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா வார்த்த மாண்வினைத் தேரன்
உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடான்’

என்று தோழி தலைவிக்கு அவன் வரவைக் காட்டிக் கூறுவதாக விளக்குகின்றது. இதில் மற்றொரு சிறப்பும் காணப்படுகின்றது. வண்டுகளும் தனித்தனியாக இல்லை. தத்தம் துணையுடன் அவை தேன் உண்டு சிறக்கின்றன என்று பேசுகின்றார் புலவர். ஆம், அவன் உள்ளம் அறியுமே தலைவியுடன் கூடியிருக்க வேண்டும் என்ற விழைவினை! ஆகவே, அவ்வாறு கூடி மகிழ்வது வண்டேயாயினும் அதற்கும் ஏதம் செய்வானா அக்கலைஞன்? இவ்