பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

15


றீர்கள். அதைப்போன்றதே இசைத்தமிழும். இடையில் இசைத் தமிழுக்குக் கேடு நேர்ந்தது. ‘இசைத்தமிழ் என்ற ஒன்று உண்டா?’ என்று தமிழனே கேட்கும் அளவுக்கு அதன் நலிவின் எல்லை சென்றுவிட்டது. ‘தமிழில் பாடவும் தமிழ் பாட்டுக்கு இசையமைக்கவும் முடியாதே’ என்றனர் பெரிய பெரிய இசைப்புலவர்கள். ஆனால் அந்த எண்ணம் அண்மையில் முறியடிக்கப்பட்டது. தமிழ் இசை தழைத் தோங்கிற்று. தமிழ் நாட்டு இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்களே இடம் பெறலாயின. எனினும், இந்திய அரசாங்கத்தின் கீழ்த் தொழிற்பட்டு வரும் வானொலி இன்னும் அத்துறையில் கருத்திருத்தவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும். இனியாயினும் டில்லி அரசியலார் அத்துறையில் கருத்திருத்தின் பயன் உண்டு. இத்தமிழ் இசைபற்றிச் சங்ககாலத்திலும் அதற்கு முன்பும் பல நூல்கள் இருந்திருப்பதாக அறிகின்றோம், அவைபற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரத்தில் எழுதப் பெற்றுள்ளன. எனினும், இன்று அவற்றைப் பெற வழியில்லை.

இசைபற்றிய பத்துப்பாட்டில் வரும் பாணாற்றுப் படைகள் நமக்குப் பல உண்மைகளை விளக்குகின்றன. யாழைக் கையில் வைத்துப் பாடுபவர் யாழ்ப்பாணர் ஆகின்றனர். சிறிய யாழ் வைத்திருப்பவர் சிறுபாணர்; பேரியாழை வைத்திருப்பவர் பெரும்பாணர். அவர்களது யாழைப்பற்றியும், அவர்கள் எழுப்பும் இன்னிசையைப் பற்றியும் மூன்று பெரும்பாடல்கள் நன்கு பேசுகின்றன. இவற்றுடன் பாடலுக்கேற்ற ஆடலும் நடைபெற்றதாக அறிகின்றோம். ஆடுபவர்களைக் கூத்தர் என்பர். கூத்தியற்றுவோர் கூத்தராவர். அவர்களைப்பற்றிய ஒரு நூலும் பத்துப்பாட்டில் உண்டு. இவ்வாறு கலைகளையே காட்டிக் கொண்டிருக்கும் பேரிலக்கியங்கள் தமிழ் நாட்டில் அன்று