பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


பல தழைத்திருந்தன. நாடகத்தைப்பற்றிக் காணுதலும் சாலும்.

நாடகம் என்பது என்ன? அது கற்றார் மட்டுமன்றிக் கல்லாரும் காட்ட விரும்பிய பொருள்பற்றி நன்கு அறிந்து கொள்ள வாய்ப்புத் தருவது. இந் நாடகத்தைத் தமிழின் ஒரு பகுதியாகவே பண்டை நாள் தொட்டுப் போற்றி வந்தனர். ஆயினும், அவ்வடிவில் இன்று சிறந்த நாடக நூல்களை நாம் பெறவில்லை. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தை நாடக நூல் என்பர். எனினும் நாடகத்துக்கு ஏற்ற வகையில் நடிப்பு முறையில் அது அமைக்கப்படவில்லை. இடையிடையே வரும் வரிப் பாடல்களைக் கொண்டும், கதை அமைப்பைக் கொண்டும், கதா பாத்திரங்கள் அல்லது நாடக உறுப்பினர்கள் பேசுமாறு அமைந்த பகுதிகளைக் கொண்டும் அதை நாடக நூல் என்று கூறுவது பொருந்தும் என்பது தெரிகின்றது. அத்தகைய நாடக நூல்களும் நாட்டில் அதிகம் இல்லை. ஆயினும் மிகவும் பழங்காலம் தொட்டே கூத்தாடும் கூத்தர் வாழ்ந்தனர் என்பது உண்மையன்றோ? பாவம்! பிற்காலத்தில் கூத்தர் கூத்தியராகி இழிநிலை எய்திவிட்டனர் போலும்!

நடனம் என்பது ஒரு கலை. இது பற்பல காவியங்களில் பாராட்டப்படுகின்றது. பரதம் என்று வட நூலார் இதனைக் கூறுவர். தமிழ் நாட்டுக் கோயில்களிளெல்லாம் நாடகமும் நடனமும் போற்றப்பட்டு வந்தன. நடனத்தே பெரும்பாலும் மகளிரே பங்கு கொள்வர். அவருள் ஒரு சார் பரத்தமை பயிலும் மகளிர் குழுவுடனேயே நடனம் தங்கிவிட்ட காலத்தில் அதற்கு இழிவு ஏற்பட்டது போலும்! இடைக்காலத்தில் உயர்குலப்பெண்டிரும் பிறரும் அதைப்