பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

17


பயில்வதே தவறு என்று எண்ணத் தொடங்கிவிட்டனர். ஆனால், அப்பரத்தையர் கோயில்களிலும் ஆடரங்குகளிலும் அக்கலையைச் சிறப்பாகப் போற்றி வளர்த்து வந்தனர். சிலப்பதிகாரம் அக்கலைவளர்ச்சியை மாதவி வாயிலாக அழகாக விளக்குகின்றது. நடனக்கலை அரங்கேற்றப்பெறுவதற்கு முன் அமைய வேண்டிய அத்தனை பண்புகளையும் தெள்ளத் தெளியக் காட்டி, அக்காலத்தில் அந்நடனக்கலை ஏற்றமுற்றிருந்த விதத்தை விளக்குகின்றார் இளங்கோவடிகள். அண்மையில் இக்கலை அனைவராலும் போற்றி வளர்க்கும் கலையாக வளம் பெற்று வருகின்றது கண்டு தமிழர் மகிழத்தான் வேண்டும்.

இந்நடனச் சிறப்பினை இயற்கைப் பொருள்களிலெல்லாம் கண்டு களித்தார்கள் புலவர் பெருமக்கள். இறைவனைப் பாட வந்த அடியவர்களெல்லாங்கூட இந்த இயற்கை நடனத்தைப் போற்றுகின்றனர். திருவீழிமிழலையில் இறைவனைப் பாட வந்த திருஞானசம்பந்தர்,

‘வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர் பொன் இதழிதர மென்காந்தள் கையேற்கும்

                                                         மிழலை யாமே’

என்று அழகுபட இயற்கை நடனத்தை விளக்கிக் காட்டுகிறார். இன்னும் கோயில்தோறும் நடனக்கலை சிறந்து நின்ற காட்சியினை அழகாக,

‘வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்

சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவை யாறே.’

எனப் பாடுகின்றார். இன்னும் எத்தனையோ புலவர்கள் இந்நடனக்கலையைப் பற்றிப் பாடிப் பரவியுள்ளார்கள்.

தமிழ் நாட்டில் மட்டுமின்றி, பரந்த பாரத நாட்டிலும் உலகிலும் கலைகள் அவர் அவர் உள்ள உயர்வுக்கு ஏற்ற

2