பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


வகையில் வளர்ந்து கொண்டே வருகின்றன. இன்றைய விஞ்ஞானம் விளைக்கும் வேடிக்கைகளையும் கலை எனக் கொள்ளலாம். சிலர் ‘அறிவியலாகிய விஞ்ஞானம் வேறு; கலை வேறு,’ என்பர். ஆனால், நான் கூறுவது விஞ்ஞானமும் ஒரு கலையாய் அடங்கி நிற்கும் என்பதே.

இன்று தமிழ் நாட்டின் கலை பிற நாட்டுக்கலாசாரப் பண்பாடுகளுடன் கலந்து வளர்கின்றது என்னலாம். புதுமையைப் போற்றும் மோகத்தில் பழமையை வாழ்வில் இழக்கும் தமிழர், அதே நிலையில் கலையையும் நோக்குகின்றனர். பழமையும் புதுமையும் கலந்த ஒரு நல்வாழ்வாகத் தமிழர் வாழ்வு இன்று அமைந்துள்ளது. மேல் நாட்டு நாகரிகமும் பிறவும் தமிழர் வாழ்வில் குடி கொண்ட போதிலும், அவர் பழங்கலையை இன்னும் மறக்கவில்லை. நாடு உரிமை பெற்ற பின் பண்டைக் கலையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து இந்திய அரசாங்கத்தார் ஆவன செய்து வருவதைக் காண, பழந்தமிழர் வாழ்வொடு கலந்த கலைகள் இனி வளமுற்று ஓங்கும் என எண்ணுகின்றேன். ஒரே உலகமாக உருவாகி வரும் இந்நாளில், உலகக்கலைகளுக்கெல்லாம் முதலிடமாகிய தமிழ்க்கலை தழைத்தோங்க அனைவரும் ஒன்றிப் பாடு படுவோமாக. அத்துறையில் இக்கங்கைக் கரையில் வாழும் காவிரி நாட்டுத் தமிழ் மக்களாகிய நீங்கள் காட்டும் உணர்வு கலந்த உழைப்பு போற்றக் கூடிய ஒன்றாகும். எங்கு வாழினும் தமிழன் என்ற எண்ணமும் அதைப் போற்ற வாழ்வு என்ற உறுதியும் கொண்ட உங்கள் உழைப்பும் உள்ளமும் சிறக்க என வாழ்த்துகின்றேன்!