பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

27


முற்பட்டது என்றும் அறிந்தோர் கூறுவர். உலக ஆயுளில் இந்த ஆறாயிரம் ஆண்டுகள் மிகச் சிறிய கூறு ஆயினும் இலக்கிய வளர்ச்சிக் காலத்தில் இது மிகவும் விரிந்த ஒன்றேயாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகமும் அதில் வாழும் மக்கள் இனமும் இப்படித்தான் இருந்தன என்று இன்றைய வரலாற்று ஆசிரியர்களாலே திட்டமாகக் கூற முடியவில்லை. ஆனால், அந்த நாளிலே தமிழ் மொழி சிறந்த இலக்கிய வளனைப் பெற்று, அதற்கேற்ற இலக்கணத்தையும் வரையப்பெற்ற ஒரு சிறந்த மொழியாய் விளங்கிற்றென்பதில் ஐயமில்லை. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் தொல்காப்பியர் காலத்தைச் சற்றுப் பின் தள்ளிப் பேசுவார்கள். எப்படிப் பேசினாலும், இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர் இருந்தார் என்பதை யாரும் மறுத்தல் இயலாது. எனவே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியம் வளர்ந்து கொண்டே வருகின்றது.

அன்று முதல் இன்று வரை தமிழ் நாட்டில் எத்தனையோ இலக்கியங்கள் தோன்றி வளர்கின்றன. அதற்குமுன் எழுத்திலிருந்து சிறந்த இலக்கிய வளர்ச்சி எவ்வாறு நடைபெற்றதென்பதைத் திட்டமாக அறிய முடியாவிட்டாலும், அன்று முதல் ஓரளவு அதன் வளர்ச்சியைக் காண வழி இருக்கின்றது. சிற்சில இடைவெளிக் காலங்களில் தமிழ் நாட்டு வரலாறு இருட்டடைப்புக்கு உட்பட்ட போதிலும் தொல்காப்பியர் காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து வளரும் இலக்கிய நிலையைக் காண ஓரளவு வாய்ப்பு இருக்கின்றது.

தமிழ் இலக்கியங்கள் இரண்டு வகையிலேயே அடக்கப் பெறும். ஒன்று அகம் பற்றியது; மற்றொன்று புறம் பற்றியது. தமிழிலே இந்த இரு வகைப் பொருள்கள்-