பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


என்பது தெளிவான ஒன்றாகும். இவ்விலக்கியங்களே தமிழர் வாழ்வை இன்று உலகுக்குச் சிறந்ததாகக் காட்டிக் கொண்டிருப்பவையாகும். இலக்கியம் என்பது மக்கள் வாழ்வோடு பிணைந்துள்ள ஒன்று என்பதை முன்னரே கண்டோம். சங்க இலக்கியம் என்னும் இத்தொகை நூல்கள் அந்த வகையில் சிறந்தனவாகும். தமிழ் நாட்டு மக்கள் வாழ்ந்த வகையினையும் அவர்தம் நில அமைப்புக்களையும் பிரிவுகளையும் பிற வகைகளையும் தெள்ளத்தெளிய அவை காட்டுகின்றன. அவற்றைப் பாடிய புலவர் பல்லோர்; அவரால் பாடப்பட்ட மன்னரும் பல்லோர். அரசருள் பலரும் புலவராய் இருந்து பாட்டிசைத்திருக்கின்றனர். அவர்கள் தத்தம் வாழ்க்கை நெறிகளைக் கூறிக் கொண்டே அவற்றுடன் நாட்டு வாழ்க்கையையும் வரலாற்றையுங்கூடக் கண்டு எழுதியுள்ளார்கள். இத்தகைய இலக்கியங்களின் பாகுபாட்டையும் அவை விளக்கும் பொருள்களையும் கூறிக் கொண்டே செல்வோமானால், அதுவே ஒரு பெரும் பேச்சாக முடிவதோடு, நான் எடுத்த பொருளை முடிக்காது விட்டவனாக்க வழியும் உண்டாகும். எனவே, இலக்கியத்தின் தணிப்பண்புகளை ஆராயாது அவற்றின் தோற்ற வளர்ச்சிகளை மட்டும் கண்டு கொண்டு மேலே செல்வோம்.

சங்ககால இலக்கியங்கள் அகம் புறம் என்ற இரண்டில் அடங்கும் என்பது பார்த்தோம். பத்துப்பாட்டு என் பது பத்துப் பெரும்பாடல்களைத் தன்னகத்தே கொண்டது. நீண்ட பாடல்கள் அவை. அவற்றுள் அரசர் சிலர் பாராட்டப் பெறுகின்றனர். தமிழ் நாட்டுப் பெருநகரமாய் விளங்கி மறைந்த காவிரிப்பூம்பட்டினம் ஒரு பாட்டால் சிறப்பிக்கப்படுகின்றது. இன்றும் சிறக்க வாழ்கின்ற