பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி


முடிபுகட்டும் வகையில் அந்த ஏழாம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை சமய இலக்கியங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன.

வெறுந்தோத்திரப் பாடல்களேயன்றிச் சமயத்தில் வழங்கும் பல கதைகளும் வரலாறுகளும் இலக்கியமாகித் தமிழ் இலக்கியத்தை வளம்படுத்தின என்னலாம். பெரிய புராணம் அத்தகைய சமய இலக்கியமேயாகும். அது தோன்றிய வரலாற்றின் வழி ஆராயின், அது சமண சமயத்தைக் கெடுப்பதற்கே தோன்றியதென்பது நன்கு புலனாகும். சிந்தாமணி படித்துக்கொண்டிருந்த சைவவேந்தன் அநபாயனை அந்த இலக்கியத்தைப் படிக்கவேண்டா என்று தடுத்து, அவன் படிப்பதற்கென்றே சைவ நாயன்மார் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தை எழுதினார் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, சமய மாறுபாட்டுக்கிடையில் இடைக்காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ச்சிபெற்று வந்தது என்பது தேற்றம்.

ஏறக்குறையப் பெரிய புராண காலத்தை ஒட்டியே கம்பர் வாழ்ந்தார் என்பர். பின் என்பார் சிலர். முன் என்பார் சிலர். நாம் இப்போது, அதுபற்றிக் கவலையுற வேண்டா. கம்பர் வடமொழி இராமாயணத்தைத் தமிழில் பெயர்த்து எழுதினார். அது இன்று உயர்ந்த இலக்கியமாகப் போற்றப்படுகின்றது. அதில் வரும் பாட்டுடைத் தலைவனாகிய இராமன், வைணவன். மற்றொரு தலைவனாகிய இராவணன் சைவன். ஏறக்குறைய அதில் சைவ வைணவச் சண்டை பேசப்படுகிறது என்பர் சிலர். இராமன் ஏற்றம் பாடுகின்ற காரணத்தினாலே வைணவர்கள் அதைச் சிறந்ததாகப் போற்றுகின்றனர். சைவர்களுக்குப் பெரிய புராணம் சமய நூலாக அமைவது போன்று, வைணவர்களுக்கு அந்த மொழிபெயர்ப்பு நூலாகிய கம்பராமாயணம் சமய நூலாய் அமைகின்றது. இரண்டிலேயும் அவ்வக்கால வாழ்க்கை ஓரளவு விளக்கப்பட்டிருக்கிறது என்னலாம். எப்படியோ