பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

43


அந்தணருக்கும் பிறருக்கும் தானமாகக் கொடுத்த தானப் பத்திரங்களே. அவை பல்வேறு அரசர்கள் காலத்தில் வெட்டப்பட்டவை. தோன்றிய அவ்வக்காலத்தில் ஆண்ட அரசர் தம் புகழ், போர், கொடை, வெற்றி ஆகியவை பற்றியும். அவர் வென்ற நாடுகள் பற்றியும் பிற சிறப்புக்கள் பற்றியும் கூறி, அத்தகைய வேந்தனது ஆட்சிக் காலத்தின் இத்தனையாவது ஆண்டில், இன்ன கோயிலுக்கு இன்ன காரணத்துக்காக இன்னார் தானம் செய்தது என்று அதில் எழுதியிருக்கும் சாசனங் குறிக்கும். அம்முதற் பகுதியை ‘மெய்க்கீர்த்தி’ (the fame of the king) என்பர். அவையெல்லாம் சாதாரண உரை நடை என்று கொள்ளப்படினும் அவற்றுள் எதுகை மோனை முதலிய செய்யுள் நயங்கள் இருப்பதோடு, சிறந்த பொருள்களையும் உண்டாக்கி, இலக்கியம் என்று வைத்து எண்ணப்படும் வகையில் வளர்ந்துள்ளன. அக்காலத்திலேதான் தமிழ் நாட்டில் பல பெருங்கோயில்கள் தோன்றினவாதலால், அந்த இலக்கியமும் நன்கு வளரலாயிற்று. இந்திய அரசாங்கத்தார் பல ஆண்டுகளாக அவற்றையெல்லாம் ஆய்ந்தெடுத்துத் தொகுத்து வெளியிடுகின்றார்கள் என்றாலும், இன்னும் அத்துறையில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே. வெளிவந்த கல் வெட்டுகள் மிகச் சில; வரவிருப்பவை அளவில. அவை வெற்று இலக்கியமாகமட்டுமின்றி, தமிழ் நாட்டு இடைக்கால வரலாற்றை உலகுக்குக் காட்டும் ஒரு பெருங்கண்ணாடியாகவும் அமைகின்றன. எனவே, இங்கு இந்த வங்க நாட்டிலிருந்து இன்று இந்திய அரசாங்கத்துக் அக்கல் வெட்டுகள் பற்றி அதிகம் கருத்து வைத்து விரைந்து எல்லாக் கல்வெட்டுக்களையும் வெளியிடவேண்டுமென இங்குள்ள அனைவர் சார்பிலும் என் வேண்டுகோளை அனுப்புகின்றேன். அரசாங்கம் ஆவன செய்வதாக.

ஏறக்குறைய இக்காலத்தை ஒட்டியும் அடுத்தும் பலஉரை நடை இலக்கியங்கள் எழுந்தன என்னலாம். தொல் காப்பியம், களவியல், திருக்குறள், பத்துப்பாட்டு, சிலப்-