பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மூன்றாம் பதிப்பின் முன்னுரை

கல்கத்தா தமிழ் மாணவர் மன்றத்தினர் தம் மூன்றாவது ஆண்டு விழாவிற்கு (1956) வருக என்றழைத்தனர். அவர் தம் ஆண்டு விழாவில் சங்க காலந்தொட்டு இன்றுவரை வளர்ந்த தமிழ் இலக்கிய மரபை ஒட்டிய வகையில் பேச்சுக்கள் அமைய வேண்டுமென விரும்பினர். அந்த அடிப்படையிலேயே காலந்தோறும் தமிழ் இலக்கியம் வளர்ந்த வகையினை காட்டும் நிலையில் இக்கட்டுரைகள் அமைகின்றன. இதன் முதல்பதிப்பு அவ்விழா முடிந்த பின்னர் (1-11-1956) வெளிவந்துள்ளது.

வங்கத்தையும் வண்தமிழ் நாட்டையும் இணைக்கும் பண்பாடு உலகறிந்த ஒன்று. இன்றைய வங்க நாட்டில் வாழும் தமிழர்கள் அந்த இணைப்பினை உறுதிப்படுத்தும் பாலமாக அமைக்கின்றனர். நில அமைப்பை இணைக்கும் பாலமாக உள்ள ‘ஹவுரா’ பாலம் அட்டையில் விளங்க, தமிழ் இலக்கிய மரபுப் பாலம் உள்ளே துலங்குகிறது. மாணவர் மன்றத்தின் ஆக்கப் பணிகள் சிறக்க என வாழ்த்துகிறேன்.

இந்நூலைச் சில பல்கலைக் கழகங்களும் மத்திய உயர் கல்விக் குழுவும் பாட நூலாக ஏற்றுப் புரந்தமைக்கு நன்றியுடையேன். பயிலும் மாணவரும் மற்றவரும் பயன் பெற்றுச் சிறப்பார்களாக!

தமிழ்க்கலை இல்லம்
அ.மு.பரமசிவானந்தம்
சென்னை-3010-6-75