பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

49


மொழியின் இலக்கிய வளர்ச்சியை ஒட்டித் தமிழிலும் உரைநடை யிலக்கியம் ஓரளவு வளர்ச்சியடைந்ததென்னலாம். இந்த நூற்றாண்டில் உரை நடை இலக்கியம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

மகமதியமும் கிறிஸ்தவமும் பரவி அவற்றின் வழி இலக்கியங்கள் வளர்ந்த அதே நாட்களில் சைவரும் வைஷ்ணவருங்கூடத் தம் கடமையை மறவாது பணியாற்றி வந்தார்கள் என்பது புலனாகின்றது. கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் எத்தனையோ சைவ வைணவப் பிரபந்தங்கள் தோன்றின. அவற்றையெல்லாம் ஈண்டு விரிப்பிற்பெருகும். சிறப்பாகத் தாயுமானவர் பாடல் சமரச உணர்வை உணர்த்தும் வகையில் சமயத் துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது என்னலாம். வைணவ நாலாயிரத்துக்கு மணிப்பிரவாள நடையாகிய தமிழும் வடமொழியும் கலந்த பெரிய உரைகள் எழுந்து, அச்சமயத்துக்கு உறுதுணையாயின. அண்மையில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க வள்ளலார் உலகைப் பொது நோக்காக நோக்கிப் பாடிய திருவருட்பாப் பாடல்கள் தமிழ் இலக்கிய வளாச்சியில் ஒரு மைல் கல் என்று சொல்வது பொருத்தமானதாகும்.

இவ்வாறான சமயத் துறையில் தோன்றிய இலக்கியங்களைத் தவிர, இடைக்காலத்தில் வேறு வகைப்பட்ட இலக்கியங்கள் தோன்றின என்று சொல்வதற்கு இடமில்லை. எனினும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டில் உரிமை வேட்கை அளவுக்கு மீறி இந்திய நாடு முழுவதிலும் கொதித்தெழுந்த காலத்து, அவ்வுணர்ச்சி தமிழ் நாட்டிலும் பரவி நின்றது. அதன் வழித் தேசிய கவிஞராகிய சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் நாட்டு மக்கள் அடிமை வாழ்வைப்பற்றியும், அவர்கள் விடுதலை பெற வேண்டிய அவசியம் பற்றியும், பாரத மக்கள் பிற நாடுகளில் அவதியுறும் நிலை பற்றியும், பாரத நாட்டுப் பழம் பெருமைபற்றியும் பலப்பல பாடல்கள் இயற்றினார். தமிழ்

4