பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

55


பின்னால் எழுந்த இலக்கியங்கள் அளவிற் பெரியனவாகி ஆயிரக்கணக்கான பாடல்களைத் தம்மிடத்தே கொண்டு விளங்குகின்றன. தனி மனிதன் வாழ்க்கை நலன்களைப் புனைந்துரைப்பதன் மூலம் சிறு சிறு பாடல்கள் சங்ககாலத்தில் எழுந்தன. அவை பிற்காலத்தில் வேறு யாராலோ ஒன்று சேர்க்கப்பட்டன. ஆனால், பின்னால் எழுந்த பேரிலக்கியங்களோ, ஒருவராலே எழுதப்பட்டு உருவாக்கப் பெற்றனவாகும். சங்ககால இலக்கியங்கள் ஒருசிறு அளவில் எல்லை காட்டி அடக்கக்கூடியதாக அமைந்துவிட்டன என்னலாம். தமிழர் தம் பண்டைப் பெருமைகளையெல்லாம் பகுத்துணர்த்தும் சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற இரண்டு அளவிலேயே அமைந்துவிட்டன. எனினும் அவை தம்முள் பொதிந்துள்ள நாட்டுமக்கள் வாழ்க்கை வரலாறு அளவிடற்கரிதாகும். என்றாலும் அவையெல்லாம் காவியம் என்று வழங்கப் பெறுவதில்லை. காவியம் என்ற பேச்சே அந்தக்காலத்தில் இல்லை. அது மெள்ள மெள்ளச் சங்ககாலத்திற்குப் பிறகுதான் தலை காட்டியிருக்கின்றது. எனினும், சிலர் சங்ககால ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காவியம் என்பர். அதை மறுக்க முடியாது. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், நான்கடிப் பாட்டுக்கள் கூடப் பலப்பல உண்மைகளைத் தம்முள் அடக்கியிருப்பன என்பதை அறியாதார் யார்?

காவியம் என்ற சொல் வடமொழி என்பர். தமிழில் காப்பியம் எனவும் அதை வழங்குவர். இத்தகைய காவியமோ காப்பியமோ எப்படி அமைய வேண்டும் என்பதை இலக்கண நூலோர் வகுத்துள்ளனர். காப்பியத்தை இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை காப்பியம், பெருங்காப்பியம் என்பன. பெருங்காப்பியம் அளவில் பெரியது என்பதோடு அன்றி, வேறு சில வகையிலும் அது சிறந்திருக்க வேண்டும் என்ற நியதியும் உண்டு. தண்டி அலங்காரம் என்ற இலக்கண நூல் இக்காப்பியத்தைப் பற்றிக் கூறுகின்றது. பாடல்களின் அணி இலக்-