பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


கணம் பற்றிக் கூறும் நூலே தண்டியலங்காரம். ஆதலின், அது கூறும் காப்பியத்திலும் பல்வேறு அணிகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது புலனாகும். பாட்டு வாழ்வை அழகுபடுத்தும் நிலைமாறி, அப்பாட்டையே பாடுபவன் அழகுபடுத்த வேண்டிய நிலை பிற்காலத்தில் ஏற்பட்டது. பாட்டில் ஆழ்ந்த கருத்துப் பொதிந்திராத நிலையில் சொற்களைக்கொண்டே அழகு செய்தனர். இயற்கை அழகு இல்லாத பெண்களும் ஆண்களும் தம்மைச் செயற்கை அழகால் சிறப்புச் செய்துகொள்வது போன்று, பொருளற்ற சில கவிதைகள் வெறுஞ்சொற்களால் அழகு செய்யப்படுகின்றன. பொருளோடு சொல்லழகும் பொருந்தியிருக்குமாயின், ‘பொன்மலர் நாற்ற முடைத்து. என்பது போன்று அது சிறந்து நிற்கும் என்பது உறுதி’ ஆனால், பிற்காலப் பாடல்களெல்லாம் அத்துணைப் பொருளாழம் அற்றன என்பதை அறிவோம் நாம். சங்க காலத் தனிப்பாடல்கள், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றன. சங்க காலப் பாடல்கள் வெறுங்கதையைச் சொல்லுவன அல்ல. அவற்றுள் பெரும்பாலன தத்தம் வாழ்க்கையினையே வரையறுக்கும் தன்மையில் அமைந்துள்ளனவாகும். நம் நாட்டில் வழங்கும் பழங்கதைகள் அச்சங்கப் பாடல்களில் உவமை வாயிலாக வழங்கப்படுமேயன்றி அப்படியே கதைகளாகவே எழுதப்பெறமாட்டா. அவ்வாறாய அக்கதைகளைக் காட்டி இது போன்ற ஒன்று தம் வாழ்க்கை நிகழ்ச்சி என்று எழுதிக்காட்டுவர் அக்காலப் புலவர். பின்னால் பேரிலக்கியமாக வளர்ந்து பல கதைகள் சங்க காலத்தில் உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு வரலாறு பற்றித் தனியாகக் கூறத்தேவையில்லை என்று விட்டார்களோ அன்றி ஏனோ, இங்கு வழங்கிய வரலாற்றுக் கதைகள் பலவும் மேற்கோளெனக் காட்டப்பெறவே இல்லை. ஒரு வேளை இது போன்ற கதைகளையும் குறிப்புக்களையும் அவர்கள் வைத்திருக்க விரும்பவில்லையோ என்று ஐயுற வேண்டியும் உள்ளது. ஏனெனில், இக்காலத்தில் வாழும் அத்தனை காப்பிய இலக்கியங்களும் சங்க காலத்திற்குப்