பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றியது என்ப.”

என்று விளக்குகின்றார். காப்பியமென்பது இவற்றுள் சில குறைந்து இயலினும் தவறில்லாது கொள்ளத்தக்காது என்பதையும் குறிக்கின்றார். இவ்வடிகள் மூலம் காப்பியம் என்பது இயல்பான வாழ்க்கையை விளக்கிக் கூறுவதோடு, பல்வேறு வருணனை, விளக்கம், கற்பனை ஆகிய அனைத்தும் கொண்டதாய் அளவில் பெரியதாய், பல்வேறு கோணங்களில் பல்வேறு வகையில் பயில்வார்க்குப் பயன் அளிப்பதாய் உள்ள ஒன்றாகின்றது. இன்றைய நாளில் பல உபயோக வேலைகள் (Multipurpose works) மேற்கொள்ளுவது போல இக்காப்பியங்கள் அன்று இயங்கின என்னலாம். கதை, கதை நிகழும் இடம், கற்பனை, இயற்கை வருணனைகள் அனைத்தும் அதில் இடம்பெறல் வேண்டும். சங்ககாலப் புலவருள் சிலர் தம் பெயரைக்கூடக் கூறவில்லையாயினும், இக்காவியப் புலவர்கள் தம்மைப் பற்றியும், தம்மைச் சேர்ந்த பிற ஆசிரியர் பற்றியும், அவையடக்கம் முதலியன கூறித்தான் மேலே நூலைத் தொடங்குகின்றார்கள். இக்காப்பியங்கள் இன்னின்ன வகையில் பிரிக்கப்பட வேண்டும் என்பதையும், இவ்வாறு பல பிரிவுகளைக் கொண்டதே காப்பியமாக அமையும் என்பதையும் மேற்கண்ட சூத்திரம் காட்டுகின்றது. இன்னும் ‘மலை கடல் நாடு வளநகர் பருவம்’ இனையனவற்றைப் பற்றியும் பாடவேண்டிய கடமை பாடுகின்ற புலவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. கம்பரைப் போன்ற இயற்கையில் கவிபாடும் புலவனாயின் எந்தக் கட்டுப்பாட்டினையும் பொருட்படுத்தாது பாடிச் செல்வான், ஆனால், பெரும்பாலாரான புலவர்கள் அந்த நிலையை எய்தாமையின் இடர்ப்படுகின்றனர்; எனவே, காவியம் பாட முயன்று இடர்ப்பட்டு இடறி வீழ்கின்றனர்.