பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


என்னலாம். அக்காப்பியத்தைத் தாம் எழுதுமுன், அதை எழுத வேண்டிய காரணத்தையும், அதில் தாம் கூறப்போகும் அறம் பற்றியும் அவர் சொல்லுகின்றார்:

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள்”

என்று கூறித்தான் கதையைத் தொடங்குகிறார்; இதை ‘ஒருபாட்டுடைச் செய்யுள்’ என்றுதான் குறிக்கின்றார். எனவே, இக்கதை மூன்று உண்மைகளை விளக்க வருவதாகும். இந்த மூன்றின் இழையிலே தம் முழுக்காவியத்தையும் கோக்கின்றர் ஆசிரியர். அவ்விழையில் நிகழ்ச்சிகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகக் கோக்கப் பெறுகின்றன. அத்துடன் உடன் பிறப்பாளனைப் போன்று தோன்றியது மணிமேகலை என்னும் காப்பியம். இரண்டும் ஒரே குடும்பத்தைப்பற்றிப் பாடுவனவாயினும் பல்வேறு வகையில் இரண்டும் வேறுபடுகின்றன.

சிலப்பதிகாரம் முதல் முதல் எழுந்த காவியமாயினும், அதன் அமைப்பும் போக்கும் உயர்ந்த நெறியில் செல்லுகின்றன. கற்றுத் துறை போய விற்பனரான அதன் ஆசிரியர் இளங்கோவடிகள், சாதாரண ஒரு மனிதனுடைய வாழ்க்கையை வைத்துக் கொண்டு உயர்ந்த ஒரு சிருஷ்டியையே உண்டாக்கிவிட்டார். தாம் எடுத்துக்கொண்ட மூன்று பேருண்மைகளை மட்டும் அவர் விளக்கி அவற்றுடன் கதையை அமைத்துத் தம் காவியத்தை முடித்துவிடவில்லை. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக, அதிலும் அகவற்பாவில் சங்க இலக்கியத்திற்கும் பிற்காலக் காப்பிய உலகத்துக்கும் பாலம் அமைப்பது போன்று அழகாக இந்தக் காவியத்தைச் செய்து முடித்துவிட்டார். இதைக் கண்டுதானே பின் வந்த