பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

63


இலக்கண ஆசிரியர்கள் காப்பிய இலக்கணத்தை எழுதினார்கள் என்னும்படி, இக்காவியம் இனிது நடைபெறுகின்றது. இதில் வெறுங்கதை பேசப்படவில்லை; தமிழ்நாட்டு வரலாறே பேசப்படுகின்றது. காவிரியும், வைகையும், பேராறும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. புகார் நகரக் கடற்காற்று நம்மீது வீசுகின்றது. மதுரைத் தெருவின் பல்வேறு மணங்கள் நம் மூக்கைத் துளைக்கின்றன. பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் ஆடை நெய்து அழகுபடுத்துகின்றோம். அதில் தமிழ் மணம் கமழ்கின்றது. சைவமும், வைணவமும், பௌத்தமும், சமணமும் தழுவி விளையாடுகின்றன. சதாரண மக்கள் வாழ்க்கையும் வழுக்கி வீழா வளவன் வாழ்க்கையும் பேசப்படுகின்றன. வழுக்கி வீழ்ந்தும் அரச கட்டிலில் விழ்ந்து, தாழ்ந்த கோலை நிமிர்த்திச் சிறப்புற்ற பாண்டியன் பண்பு பாராட்டப் பெறுகின்றது. அனைத்துக்கும் மேலாகத் தமிழர் பிறர் பழித்துரைப்பதைத் தாங்கார் என்ற உண்மையைச் செங்குட்டுவன் வடநாட்டு யாத்திரை நமக்குத் தெரிவிக்கிறது. இவ்வாறு கடல் வளமும் மலை வளமும் பிற நலங்களும் ஒருங்கே பேசப்படும் அச் சிலப்பதிகாரத்தில் நாம் நம்மையே மறந்துவிடுகிறோம். படிப்பவரைத் தன் வசப்படுத்துவதுதானே காப்பியம்? ஆம்! அந்த வகையில் இச் சிலப்பதிகாரம் என்ற முதன் முதல் எழுந்த செம்மைத் தமிழ்க்காப்பியம் ஏறு நடையோடு வீறுபெற்றுக் கால எல்லையைக் கடந்து விளக்க முற்றுக் கொண்டே செல்கின்றது. காப்பிய இலக்கணத்தை தண்டியார் கூறிய அத்தனை இலக்கணத்தையும் இதில் காணலாம். காவிரியைப் பற்றிப் பாடும் புலவன் பாட்டு நம்மை நாம் இப்போது தாங்கியுள்ள வங்க நாட்டிலிருந்து காவிரிக்கரைக்கே அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை அது போர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!’