பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

67


பெண்டிர் கொல்லோ பேணுனர் கொல்லோ
யாவையீங் களிப்பன் தேவர்கோன்!’

என்று ஆபுத்திரன் கேட்கும் காலத்து ‘இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டா’ ஆண்மையன்றோ உள்ளத்துப் பிறக்கின்றது? இத்துணைச் சிறந்த வகையில் பல உண்மைகளை உள்ளடக்கி எழுந்த இந்த மணிமேகலை என்னும் காப்பியம் சிலப்பதிகாரத்தைப் போன்று ஏற்றமடையாததற்குக் காரணம், இது ஒரு சமய உண்மையைப் பற்றிச் சிறப்பித்து, மற்றவற்றைத் தாழ்த்தியமையேயாகும். இது பற்றிப் பிறிதோரிடத்தும் கூறியுள்ளேன். ஆகவே, இந்த அளவோடு இதை நிறுத்தி மேலே செல்வோம்.

தமிழில் தோன்றிய முதல் இரண்டு காப்பியங்கள் இவ்வாறு அமைய, இவற்றிற்குப் பின் எத்தனையோ வகையான காப்பியங்கள் எழலாயின. தோன்றிய அத்தனையும் மாய்ந்தொழிய, ஒரு சிலவே இன்று நம்மிடை வாழ்கின்றன. அவற்றுள் சீவக சிந்தாமணியும், சேக்கிழார் பெரிய புராணமும், கம்பர் ராமாயணமும் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமய உண்மையைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டதேயாயினும், அவற்றின் மேலாக, பல நல்ல பண்புகளையும் இவை தம்முள் அடக்கி நின்றமையின் இன்றளவும் சாகாமல் வாழ்கின்றன என்னலாம்.

சிலம்பும் மேகலையும் சங்க இலக்கியங்களை ஒட்டி, அகற்பாவில் அமைய, பின்னர் வந்த இலக்கியங்களெல்லாம் விருத்தமெனும் ஒண்பாவால் எழுதப்பெற்றன. அந்த முறைக்கு வழிகாட்டியாய் அமைந்தவர் சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவராவர். அவரும் தம் சமயமாகிய சமணத்தின் உண்மைகளைக் கூறத் தம் இலக்கியமாகிய காவியத்தில் பெரும்பாடு பட்டிருக்கின்றாரேனும், கதைப்-