பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய உலகம்

69


‘கண்எனக் குவளையைக் கட்டல் ஓம்பினார்

வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்’

என்றும் இன்னும் பல வகையிலும் பாராட்டியிருத்தலை நூல் வழிக் காணல் சாலச்சிறந்தாகும்.

இவ்வாறு காப்பிய உலகத்தின் முதல் வரலாறு கழிய, இடைக்காலத்தில் எத்தனையோ காப்பியங்கள் எழுந்தன. அவை வாழ்ந்தனவா அன்றி வீழ்ந்தனவா என்று அறிய முடியாதபடி அடங்கிக் கிடக்கின்றன. முன்கண்டபடி வாழ்வன பெரிய புராணமும் கம்ப ராமாயணமும். சிறந்த புலவர்கள் பாடிய இரண்டொரு காவியங்கள் கூட மறையக் காரணம் அவை மக்கள் வாழ்வொடு பிணையா ஒன்றே. இன்று சில இலக்கியங்களை வேண்டா என்று கூறுபவர் நாட்டில் வாழ்கின்றார்கள். ஆனால், வாழ்வோடு தொடர்புடைய காவியங்களையே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். வாழ்வொடு தொடர்பற்ற எத்தனையோ காவியங்கள் இது போன்ற பிரசாரக்காரர் இன்றித் தாமாகவே சாய்ந்து ஒழிந்துவிட்டன. ஆனால், இத்தனை எதிர்ப்புப் பிரசாரத்துக்கு இடையிலும் வாழ்வு பற்றிய காவியங்கள் வாழ்வது மட்டுமன்றி வளம் பெற்றுப் பிற நாடுகளுக்கும் சென்றும் வளர்ச்சியுற்றுள்ளன.

காலத்தால் மிகப்பிற்பட்டுத் தோன்றிய ஒரு வகைக் காவியங்கள் முளையிலேயே சவக்குழியை அடைந்தன என்பதைக் கண்ணால் கண்டிருக்கின்றோம். சிறந்த அறிஞர்களாகிய சிவஞான முனிவர், சிவப்பிரகாசர் போன்றவர்களெல்லாம் எழுதிய அந்த வரிசைக் காப்பியங்கள் வாழ்விழந்து கிடக்கின்றன என்னலாம். பல இருக்குமிடம் தெரியாமலே மாய்ந்து ஒழிந்தன. ஒன்றிரண்டு பெயரளவில் வாழ்ந்திருக்கின்றன. அவற்றின் பெயர்களைக் கேட்பார் மிகச் சிலர். அவைதாம் தலபுராணங்கள் என்பன. தலபுராணங்களைத் தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் எழுதத் தொடங்கிவிட்டனர் பிற்காலத்திலே, அந்த