பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


வழக்கம் வடமொழி பற்றி வந்தது என்பர். எப்படியாயினும், அவற்றின் கதைகளும் அமைப்பும் மக்கள் வாழ்வுக்குப் புறம்பாக அமைந்த காரணத்தாலேயே அவை வழக்கிழந்து ஒழிந்தன. உயர்ந்த இடங்களாகப் போற்றப்படுகின்ற சிதம்பரம், மதுரை போன்ற இடங்களைப்பற்றி எழுந்த அந்தப் புராணங்கள் அழிந்தொழிய, அதே வேளையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த அத்தகைய நகரங்களைப் பற்றிய பழைய பட்டினப்பாலையும் மதுரைக் காஞ்சியும் வாழ்வானேன்? பட்டினம் அழிந்தும் பாலை வாழ்கிறது. சிதம்பரம் இருந்தும் புராணம் செத்தது. அதன் காரணம் ஒன்றேதான். அதுதான் அக்காவியம் வாழ்வொடு பொருந்தாத நிலை. இது போன்று இன்னும் எத்தனையோ பிற்காலக் காவியங்கள் மாய்ந்தொழிய, சில பண்டைக் காவியங்கள் வளங்குன்றாது வாழ்கின்றன.

இன்றும் பலர் காவியம் எழுதுகின்றார்கள். ஆனால், அவைகளெல்லாம் காவியங்கள் தாமா என்பதைக் காலம் காட்டும். பல, காவியங்கள் அல்ல என்பதை நீங்களே இதற்குள் கண்டிருப்பீர்கள். தோற்ற மூலமே சவக் குழியாக மாறி மறைந்த எத்தனை எத்தனையோ காவியங்களை நீங்கள் அறிவீர்கள்.

காவியங்கள் பாட்டாக இருக்க வேண்டுவதில்லை. உரை நடையிலும் காவியங்கள் இருக்கலாம். இறையனார் அகப்பொருள் உரையைக் காவியம் என்னலாம். அது போன்றே இந்த இருபதாம் நூற்றாண்டின் இடையில் எத்தனையோ உரை நடைக் காப்பியங்கள் வெளி வருகின்றன. உரிமை பெற்ற இந்திய அரசாங்கத்தார் தம் நாட்டில் உள்ள எல்லா மொழிகளையும் வளர்க்க ஆவன செய்கின்றார்கள். அவற்றின் வழித் தமிழ்க் காப்பியமும் இலக்கியமும் கலைகளும் ஓரளவு வளர்கின்றன என்னலாம். என்றாலும், பாரதியார் கண்ட கனவு நனவாக இன்னும் எத்தனை நாளாகுமோ! வருங்கால இளைஞர்கள் அத்-