பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

73


தொடக்கத்திலே சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றித் தமிழ் நாடு முழுவதும் சுற்றி வந்து பற்பல வகையில் பற்பல இடங்களில் ஆண்டவனைப் பாடிப்பரவ, அவர் தம் அடிச்சுவடு பற்றிப் பின்னால் வந்த பெருமன்னர்கள் பெருங்கோயில்களை எழுப்பினார்கள். அதற்குமுன் தமிழ் நாட்டு வரலாற்று இருண்ட காலமாகிய கி. பி. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளிலும் சோழன் கோச்செங்கணான் போன்றவர்கள் சுடுகற் கோயில்கள் கட்டியிருக்க வேண்டும். தேவாரப் பிரபந்தத் தோற்றக்காலத்திலே வாழ்ந்த பல்லவப் பேரரசர்கள் குகைக் கோயில்களையும் பிற கோயில்களையும் கட்டி முடித்தனர். எனவே, கடவுள் நெறி சங்க காலத்துக்குப்பின் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் தழைத்தது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டில் பிற சமயங்கள் ஆதிக்கம் செலுத்த நினைத்ததேயாகும். தமிழ் நாட்டில் சங்ககாலம் வரை சைவமும் வைணவமுந்தான் நிலைபெற்றிருந்தன என்பதை இலக்கியங்களே காட்டுகின்றன. அக்கால இறுதியிலேதான் வட நாட்டுப் பௌத்தமும் அத்துடன் சமணமும் தமிழ் நாட்டில் கால் கொள்ளலாயின. ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து நோக்கும்’ தமிழர்கள் அவ்விரண்டு சமயங்களையும் அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், பின்பு தமிழ் நாட்டில் தோன்றி அச்சமயங்களைப் பின் பற்றிய சாத்தனார் போன்ற பெரும் புலவர்களே தம் நாட்டுப் பழஞ்சமயங்களைப் பழிக்கத் தொடங்கியதையும், அவர்கள், பழஞ்சமயங்கெட அரசர் துணை கொண்டு அவதி விளைத்ததையும் கண்டார்கள்; வீறிட்டெழுந்தார்கள். நாட்டில் சமயப் போராட்டங்கள் நடைபெற்றன. இறுதியில் தமிழ் நாட்டுப் பழம்பெருஞ் சமயங்களாகிய சைவமும் வைணவமும் வெற்றி பெற்றன. அப்போராட்டக் காலத்திலேயும், வெற்றியின் பின்னும் தோன்றிய இலக்கியங்களே திருமுறைகளும் பிரபந்தங்களும்.

சைவ சமயத்தே பாட்டிசைத்தும், பரமனைப் பரவியும் பிற வகையில் மக்கட்கும் இறைவனுக்கும் தொண்டு