பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

77


மங்கை ஒருத்தி தன் தாலியைக் காணிக்கையாக ஈந்தாளாம். அவளது தியாகம் பற்றிப் பாராட்டி அவளது அருஞ்செயலைப்போற்றிப் பல பத்திரிகைகள் எழுதினவாம். இந்து சமயப்படி கணவன் கட்டிய தாலியை இப்படி எடுத்துத் தருதல் தக்கதோ? இதே நிலையிலே தான் ஒருவேளை இயற்பகையார் சமயப் பற்றின் எல்லையில் நின்றுவெறியாக மாறும் வகையில் நின்று—அனைத்தையும் மறந்து, தம் சமுதாய வாழ்வையும் மறந்து, தம் மனைவியை மற்றவனுக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்குச் சேக்கிழார் எப்படிக் குற்றவாளியாக முடியும்? உள்ளதை உள்ளவாறு வரலாற்றுக் கண்வழி ஆராய்ந்து எழுதிய கதையிலே இக்கட்டத்தை விட்டு வேறு எந்தக் கற்பனையை நுழைப்பது? மேலும், சேக்கிழார் அந்த இயற்பகையார் செய்த செயலைத் தவறு என்று கண்டித்திருக்கிறாரேயன்றிப் போற்றிப் புகழவில்லை. சீர்திருத்தத்தின் முக்கியத்தைப்பற்றி மேடைமேல் பரக்கப் பேசித் தத்தம் வீடுகளில் அச்சீர்திருத்தங்களைக் கொள்ள விரும்பாத பலருக்கு இவ்வுண்மை புலனாகாமல் போகலாம். ஆனால், பெரிய புராணத்தை ஆராய்ந்தால் இந்த இயற்பகையாரின் செயலை, அக்காலச் சமுதாயமும் அதன் வழிச் சேக்கிழாரும் எப்படிக் கண்டிக்கிறார்கள் என்பது புலனாகாமல் போகாது.

இயற்பகையார் தம் உற்றார் உறவினர் அறியா வண்ணம் வந்த அடியவரிடம் தம் மனைவியை ஒப்படைத்து உடன் அழைத்துச் செல்லச் சொல்லிவிட்டார். அந்த அடியவரும் அவ்வாறே அழைத்துச் செல்வதை, அயலில் உள்ள சுற்றத்தார் கண்டார்கள்; கண்டதும் அவ்வியற்பகையார் செயலைக் கொண்டாடிப் போற்றவில்லை; இன்றைய எதிர்ப்பாளர்களைக் காட்டிலும் அதிகமாகவே எதிர்த்தார்கள். அவர்கள் வாக்கிலே சேக்கிழார் அச்செய்கை சமுதாய விரோதமானது என்பதைத் திட்டவட்டமாக விளக்குகின்றார்.

“ஏட! நீ என்செய் தாயால்! இத்திறம் இயம்பு கின்றாய்!

நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய்; இன்று