பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


தன் மைந்தனையே தேர்க்காலில் வீழ்த்திக் கொன்றான் மனு வேந்தன். இந்த நிகழ்ச்சியைக் கூறும் வகையில் சேக்கிழார் உலகில் என்றென்றும் ஆள நினைப்போர் மேற்கொள்ள வேண்டிய அறநெறியை வற்புறுத்துகின்றார். அரசன் எப்படிப்பட்டவனாய் இருக்க வேண்டும் என்பதை,

‘மாநிலம்கா வலனாவான் மன்னுயிர்காக் கும்காலை
தான்அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறந்தால் கள்வரால் உயிர் தம்மால்

ஆனபயம் ஐந்தும்தீர்த்து அறங்காப்பான் அல்லனோ?’

என்று கூறிப் பின் ஆட்சி செய்தல் அனைவரும் நினைப்பது போன்று அவ்வளவு எளிதன்று என்பதை,

‘ஒருமைந்தன் தன் குலத்துக்கு உள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை கடன் என்று தன்மைந்தன்
மருமம்தன் தேராழி உற ஊர்ந்தான் மனுவேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான்!’ (திருநக. 55)

என்ற பாடலால் தெள்ளத் தெளிய விளக்குகின்றார். அருமந்த அரசாட்சி செய்வது அரிதோ எளிதோ? எண்ணிப் பார்த்து முடிவு செய்யவேண்டிய ஒன்றான்றோ அது? ஆம்! மனுச்சோழனுடைய நீதி தவறா நெறிமுறையை ஆராயின், அவ்வாட்சி முறை ‘அரிது அரிது!’ என்று அஞ்சத்தக்க ஒன்றுதானே? இவ்வாறாய உண்மைகளை எல்லாம் எடுத்துக்காட்டும் சேக்கிழார் பின்னும் அடியராக வரும் அரசர் பற்றிக் கூறும்போதெல்லாம் இந்நெறியை விளக்கி, நாட்டில் நல்ல மன்னரிலரேல் வாழ்வில்லை என்பதைக் காட்டிக்கொண்டே செல்கிறார்.

நீதி வழங்கும் முறையினைக் காணும் போதும் சேக்கிழார் ஆளும் முறை அறியத்தக்கது ஒரு பொருள் ஒருவருக்கு உடைமையானது என்னும்போது அது ஆட்சியிலாவது, எழுத்து மூலமாவது, அன்றி மற்றவர் சாட்சி