பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலையும் வாழ்வும்

3


கின்றார்கள் என்று கேள்விப்படுகிறோமேயன்றி, கலைக்காக வாழ்வை இழந்தவர் பலர் இருக்க முடியாதே!

கலையைக் காணவும் துய்க்கவும் அனைவராலும் முடியாது என்பது உண்மைதான். ஆனால், அந்தக் கலையை, உயிர்கள் சிறப்பாக மனிதர்கள் ஒதுக்கிவிட்டு வாழவும் முடியாது. வண்ணங்களைக் கண்டு பறக்கும் பூச்சிகளும் வண்டுகளும் தம்மை மறந்து இசை எழுப்பிச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காண்கின்றோம். பெண் பூச்சிகளின் இயற்கை வண்ணங்கள், அவற்றை நோக்கி ஆண்கள் பறந்து வருவதற்கெனவே அமைந்தனவாய் உள்ளன என்று இன்றைய விஞ்ஞானிகள் எழுதுகின்றார்களே! ஆகவே, எந்த உயிராயினும் அது கலை உளம் பெற்றே வாழ்கின்றது என்பது உறுதி. ஆனால், மனிதனைப்போல அவை தாம் பெற்ற கலை உணர்வை உலகுக்கு எடுத்துக் காட்டுதற்கு இயலாதனவாய் அமைகின்றன. மனிதன் தான் கண்ணால் காண்பனவற்றையும் காதால் கேட்பனவற்றையும் உணர்ந்து, ‘யான்பெற்ற இன்பம் வையகம் பெறுக!’ என்ற எண்ணத்தால் அனைத்தையும் எழுதி வைத்துவிட்டான். அவை பின் இலக்கியக் கலையாய் வளர்ந்துவிட்டன. ஆனால், பாடும் குயிலும், பறக்கும் வண்டும், ஓடும் ஆறும், ஏன்-உறங்கும் மேதியுங்கூட அவ்வாறு தாமே இலக்கியக் கலையை உண்டாக்காவிடினும், அவை இலக்கியக் கலைக்கு இடமாக அமைந்து அதன்வழி நாட்டில் பல கலைகள் தோன்ற இடமாய் அமைகின்றன. அவற்றைக் கண்டே கவிஞன் தன் இலக்கியத்துக்கு உயிரும் உணர்வும் ஊட்டுகின்றான். உலகில் காணும் எந்தப் பொருளிலும் கலை நலம் தோய்ந்து கிடக்கின்றது. அதைக் காணக் கண் வேண்டும். அதை அனுபவிக்க நல்ல தூய உள்ளம் வேண்டும். கலை எழவும், கலையைத் துய்க்கவும் அடிப்