பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

85


பரோ! இன்னும் பரவையாரும் சுந்தரரும் ஆரூரில் இறைவன் திருமுன் முதல் முதல் கண்டு இருவரும் மாறிப்புக்கு இதயமெய்தியதைக் காட்டும் காட்சியையும், பரவை நிலாமுற்றத்துத் துயிலாற்றாது வாடிய வாட்டத்தினையும் பயிலின், இஃது ஓர் அகப்பொருள் நூல் என்றே தோன்றும். இத்துனைக் காதல் வாழ்வைப் புகுத்தும் நிலையிலும், தாம் காட்ட வந்த கடவுள் நெறிக்குப் புறம்பே செல்லா வகையில் இக்காதல் வாழ்வைக் கடவுள் வாழ்வொடு பிணைக்கும் பெருநெறி அறிந்து இன்புறற்பாலதாகும்.

நேராகக் கடவுளை வணங்கும் நெறியைக் கூறுவதோடு இறைவன் அடியவரைப் போற்றும் தெய்வ நெறியைச் சேக்கிழார் அப்பூதி அடிகள் வாயிலாக நன்கு விளக்குகின்றார். அத்துடன் தன்னை ஒறுத்து, தற்பெருமை வேண்டாது உண்மை அடியவர் பெயரால் செய்யும் பெருந்தொண்டும் அதனால் பேசப்படுகின்றது. ஐந்து ரூபாய்க்குச் சுமை தாங்கி செய்தாலும், ஐம்பது ரூபாயில் ஓரு பொருள் வாங்கித் தந்தாலும் அவற்றுளெல்லாம் தம் பெயரைப் பொறித்துப் பெருமை காட்டிக் கொள்ளும் இன்றைய நாகரிக உலகுக்கு இச்செயல் ஒரு வேளை பொருந்தாததாகலாம். தனக்கென ஒன்றுமில்லையாயினும் எல்லாம் இருப்பதாகக் காட்டி மற்றவர்களை வருந்தி அழைத்துத் தமக்குச் சிறப்புச் செய்ய வற்புறுத்தி, வேண்டுமானால் தம் பொருளையே கொடுத்தும் புகழ்தேட விரும்பும் இன்றைய நாகரிக உலகுக்கு இது போன்ற செயல்கள் அநாகரிகமாகத் தோன்றலாம். ஆனால், மனிதனை மனிதனாகக் காட்ட விழைந்த சேக்கிழார், அப்பூதி அடிகள் வாழ்வின் வழி ஓர் உயர்ந்த மனிதனை—தன்னை ஒறுத்த தகைமையாளனை—நன்கு காட்டுகிறார். தம் செல்வத்தையும் மக்களையும் நாவரசர் பேராலேயே வழங்கினார் அவர். காவளர்த்தும், குளந்தொட்டும், தண்ணீர்ப்பந்தர் வைத்தும் ஒன்றிலும் தம் பெயரை எழுதிக்கொள்ளாது, மெய்யடியராய திருநாவுக்கரசர் பெயரையே வைத்த அவர் பெருமை சிறந்த ஒன்றன்றோ?