பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


சாதி வெறி பிடித்தலையும் இன்றைய சமூகத்துக்கு அந்தணர் குலத்தில் பிறந்த அப்பூதி அடிகளார் வேளாண் குலத்தவராகிய நாவரசருக்கு அடியவராகி என்றென்றும் குடிமுழுதும் ஆட்பட்ட பெருமை, வாழ வழிகாட்டியாக அமையாதோ? திருநாவுக்கரசரை முன்பின் பாராத போதும், அவரே நேரில் வந்த காலத்தே அறியா நிலையிலும், அவர் புகழ் கேட்டு, அவர்தம் தூய துறவு நிலை கேட்டு, தம் குடும்பத்தையே அவருக்குத் தொண்டாக்கிக்கொண்ட புனிதத்தன்மை, வரலாறு காணாத ஒன்றன்றோ? திருநாவுக்கரசரே வந்து, ‘தண்ணீர்ப் பந்தலில் நும் பேர் எழுதாதே வேறொரு பேர் எழுதக் காரணம் என்ன?’ என்று கேட்டதும் எத்துணைச் சீற்றமடைந்தார் அப்பூதியார்!

‘நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர்! நாணில் அமண் பதகருடன்
ஒன்றியமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டின் உறைப்பாலே
வென்றவர்தம் திருப்பெயரோ வேறொரு பேர்?’ (அப். 13)

என்ற கேள்வியிலேதான் எத்தனை வேகம் விளங்குகிறது! இப்படித் தன்னையே ஒறுக்கும் வாழ்வன்றோ மனிதனை மேலான அருட்செல்வனாக்கும் வாழ்வு!

இனி, உலக மக்கள் தம்மைப்போன்று மற்றவரையும் ஒத்து நோக்கி வாழ்தலே கடவுள் நெறி என்பதைத்தான் சேக்கிழார் எத்தனை இடங்களில் எத்தனை எத்தனை வகையாக விளக்கிக் காட்டுகின்றார்! வந்தவருக்கு வாரி வழங்கி வறுமையுற்ற அடியவர்தாம் எத்துணையர்! வாட்டும் பஞ்சத்திலும் வந்ததை வைத்துக்கொண்டு, கறுப்புச் சந்தையில் விற்றுக் காசு சேர்க்க நினையாது, எல்லார்க்கும் வாரி வழங்கும் மனிதத் தன்மை அவர் நூல் முழுதும் விரவிக் கிடப்பதைப் பயில்வாரன்றோ அறிவர்? ஒன்றிரண்டு கண்டு மேலே செல்லலாம்.