பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த் செல்வம்

87


திருவீழிமிழலையில் உண்டான கொடும் பஞ்சத்தைப் பற்றிச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். அதுபற்றிக் கால ஆராய்ச்சியாளர்களும் ஆராய்கின்றார்கள். அப் பஞ்சத்தில் அப்பரும் சம்பந்தரும் இறையருளால் காசு பெறுகின்றனர். அவர்கள் பஞ்சத்தில் பெற்ற காசினைத் தமக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. அதனால் வரும் பொருள் கொண்டு அனைவருக்கும் உணவளித்தனர் என்கின்றார் சேக்கிழார். இதோ அவர் வாக்கு:

‘அல்லார் கண்டத்து அண்டர்பிரான் அருளால் பெற்ற
                                                             படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும்
                                                          பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறிட்டார்; துயர்கூர் வறுமை
                                          ஒழித்திட்டார்.’ (திருநா. 259.)

ஆம்! இருவேளையும் வருக எனப் பறைசாற்றி எல்லா உயிர்களையும் அழைத்து உணவிட்டு அந்தப் பகுதியில் பஞ்சமே தலைகாட்டாதபடி செய்தனர் இருவரும். இன்று ஒருசிலர் உணவுப்பொருள் பதுக்குவதே பஞ்சத்துக்குக் காரணம் என்று பறைசாற்றுகின்றனர் அரசாங்கத்தார். அது ஒரு காலம்—இதுவும் ஒரு காலந்தானே!

இனி, இதைப் போன்றே மற்றோர் இடமும் நினைவுக்கு வருகின்றது. சுந்தரர் இறைவனைப் பாடி நெல்லைப் பரவையார் மனையில் கொண்டு வந்து குவிக்கின்றார். குண்டையூரில் நெல் பெற்று கோளிலியின் ஆள் அனுப்பி, அனைத்தையும் ஆரூரில் சேர்ப்பித்தார். வளஞ் சுரக்கும் ஆரூரில் நெல் இல்லாமலா அங்கிருந்து கொண்டு வந்தார்? அப்படியாயின், அங்குப் பஞ்சமல்லவா நிலவியிருக்க வேண்டும்? அந்த நிலையிலே வந்த நெல்லை வாரிக் களஞ்சியத்திலே வைக்க விரும்பவில்லை பரவையார். அதை அனைவரையும் வாரிக் கொள்ள உத்தரவிடுகின்றார். அதைச் சேக்கிழார் வாக்கிலேயே காண்போம்: