பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


வன்தொண்டர் தமக்களித்த நெற்கொண்டு மகிழ்சிறப்பார்
‘இன்றுங்கள் மனை எல்லைக்கு உட்படுநெற் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்க’ என
வென்றிமுரசு அரைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்.

(ஏயர். 28)

என்ற அடிகள் எண்ணி எண்ணி மகிழ வேண்டுவன அல்லவோ!

இவ்வாறு வாழ்வை விளக்கும் சேக்கிழார் நிலையைப் பலகோணங்களிலிருந்து காண இயலும். எனினும், இந்த அளவில் இதை நிறுத்தி, அவர் புலமையையும் பிற இயல்புகளில் இரண்டொன்றையும் கண்டு இன்றைய பேச்சை முடித்துக்கொள்கின்றேன். கவிஞர்கள் இயற்கையை வருணிக்கும் சிறப்பிலேதான் நல்ல பெயரைப் பெறுகின்றனர். சங்ககாலப் புலவர் தொடங்கி இன்றைய புலவர் வரையில் இந்த இயற்கையின் போற்றலிலே தான் பிறர்தம் போற்றலைத் தாம் பெற்றுவிடுகின்றனர். தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலம், வடமொழி போன்ற பிற மொழிகளிலுங்கூட இயற்கைப் புலவர்கள் தாம் நன்கு போற்றப்படுகின்றனர். காவியங்களுக்கு இயற்கை வருணனையே ஏற்றத்தைத் தருகின்றது. சேக்கிழார் இந்த வகையில் தம் காவியத்தில் இயற்கை நலனை எடுத்தாளும் திறன் காணத்தக்கதாகும்.

திருநாட்டுச் சிறப்பில் நாட்டு வளத்தையும் வயல் விளைவையும் காட்ட விரும்புகின்றார் சேக்கிழார். சாலி நெல் கதிர் முற்றிச் சிறந்து விளைந்துவிட்டது. அதை விளக்க விரும்பும் சேக்கிழார், தாம் எடுத்துக்கொண்ட சமயநூல் நெறிக்கு ஏற்பக் கடவுள் தன்மைபெற்ற அடியவர் தன்மையொடு இவ்விளைவை ஒப்பிட்டு இயற்கைக் காட்சியினைக் காட்டிக் கடவுள் உணர்வைத் தூண்டுகிறார்.

‘பத்தியின் பால ராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்

தத்தமில் கூடி னார்கள் தலையினால் வணங்கு மாபோல்