பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

89


மொய்த்தநீள் பத்தி யின்பால் முதிர்தலை வணங்கி மற்றை

வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி யெல்லாம்’

(திருநாட் 22)

என்று சேக்கிழார் விளைவின் மேன்மையையும் அதே காலத்தில் அடியவர் எப்படி ஒருவரோடொருவர் பழக வேண்டும் என்பதையும் காட்டிய சிறப்புப் போற்றத்தக்க ஒன்றல்லவா?

அகப்பொருளில் மகளிர் இரு வகையாகப் பேசப்படுகின்றனர். கொண்ட கணவனை யன்றி வாழவெண்ணார் குல மகளிர், நெஞ்சால் விரும்பாது பொருளால் பிறரைத் தழுவுவர் பொதுப்பெண்டிர். இவ்விருவரையும் எண்ணிப் பார்க்கின்றார் சேக்கிழார். இருவருக்கும் இரு இயற்கைகள் உவமையாக்கப் பெறுகின்றன. மாலைக்காலம் இருட்டொடு வந்தது. அதைப் பரத்தையர் உள்ளத்துக்கு உவமையாக்கிவிட்டார். அத்துடன் வினையின் கொடுமையும், கடவுள் நெறியற்றவர் உள்ளமும் ஒன்றாக்கப் பெறுகின்றன. மற்றோர் இடத்தில் கடல் நோக்கிப் பிளந்து செல்லும் வையை யாற்று வெள்ளப் பெருக்கு, கார் காலத்தே தன் கணவன்பால் கருத்தால் பிணைப்புண்டு செல்லும் கற்புடை மகளிரை அவர்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது. இரண்டையும் கூறுமிடங்கள் நோக்கத் தக்கன. சிறந்த பரவையார் பிறந்த குலம் ‘பதியிலார் குலமா’யிற்றே என்று எண்ணும்போது சேக்கிழார் இருளுக்கு அந்த வுவமையை எண்ணி, மங்கையர்க்கரசியாகிய பாண்டிமாதேவியை எண்ணும்போது கற்புடை மகளைப் போன்ற வையைப் பெருக்கை எண்ணிப் போற்றும் செம்மை நினைக்கத்தக்க ஒன்றன்றோ? இருபாடல்களையும் இதோ உங்கள் முன் வைக்கின்றேன்:

‘பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்

வஞ்ச மாக்கள் தம் வல்வினை யும்அரன்