பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


அஞ்செ ழுத்தும் உணரா அறிவிலோர்

நெஞ்ச மென்ன இருண்டது நீண்டவான்’
(தடுத்தாட். 159)

என்றும்,

‘கார்கெழு பருவம் வாய்ப்பக் காமுறு மகளிர் உள்ளம்
சீர்கெழு கணவன் தன்பால் விரைவுறச் செல்லு மாபோல்
நீர்கெழு பௌவம் நோக்கி நிரைதிரை இழுத்துச் செல்லும்

பார்கெழு புகழின் மிக்க பண்புடை வையை யாறு’

(சம்ப . 812)

என்றும் அவர் வாக்கு பாட்டாகச் சிறக்கின்றதைப் படித் தல் சுவை பயப்பதாகும்.

இனி, அந்தக் காதல் வாழ்வில் முகிழ்க்கும் கான்முளையாகிய குழந்தைக்கு அன்னை எவ்வாறு அருள்சுரப்பாள் என்பதைப் பாலாற்றின்மேல் வைத்துப் பாராட்டுகிறார். பாலியாற்றில் வயல் உழவர் மண்ணைப் புரட்டி, ஊற்று நீரைத் தோற்றுவித்து அதன்மூலம் வயல் வளத்தைப் பெருக்கும் தமது வேளாண் வாழ்வையே எண்ணிப் பார்க்கின்றார் சேக்கிழார். பிள்ளை தைவரப் பால் சொரியும் அன்னையின் கருணை உள்ளமும் உடன் தோன்றுகின்றது. இரண்டையும் இணைத்து அழகாகப் பாடுகிறார் சேக்கிழார். அதனை அவர் வாக்கிலேயே காண்போம்:

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்
மள்ளர் வேனிலில் மணல்திடர் பிசைந்துகை வருட
வெள்ள நீர்இரு மருங்கு கால் வழிமிதந்து ஏறிப்

பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி’

(திருக்குறிப்பு, 22)

இவ்வாறு இயற்கையை எண்ணி எண்ணிப் பாடும் சேக்கிழார், தாம் காட்ட விரும்பும் அடியவரைப் பற்றியும் அவர் தம் புறத்தோற்றம் அகப்பொலிவு பற்றியும் பலவாறு விளக்கிக் காட்டி, மெய்ச்சமயம் போற்றும் அடியவர்கள்