பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கஞ்சியிலும் இன்பம்

ல்லற வாழ்க்கையில் வீட்டுக்குள்ளே அரசாட்சி புரிபவள் பெண் ஆடவன் வெளியிலே சென்று முயற்சி செய்து பொருள் ஈட்டி வருகிறான். அதை அளவாகச் செலவிட்டுக் குடும்ப நிர்வாகத்தை மிகவும் புத்திசாலித் தனத்தோடு செய்யக் கடமைப்பட்டவள் மனைவி. அவன் எவ்வளவு சம்பாதித்தாலும் வீட்டில் இருக்கிறவள் அடைவு இல்லாவிட்டால் சம்பாத்தியத்தால் இன்பம் இல்லை. நாலு பேரோடு ஐந்தாம் பேராகச் சாப்பிடவும், புடைவையும் நகையும் வாங்கிக் கொண்டு மினுக்கவுமே தெரிந்த பெண்மணிகள் மனைத் தலைவிகளாக இருக்கத் தகுதி அற்றவர்கள். வீட்டில் இருக்கும் பொம்மைகளோடு அவர்களேயும் சேர்த்து எண்ணவேண்டியதுதான்.

குடும்பமாகிய அரசாட்சியை நடத்தத் தெரிந்த பெண்மணிதான் இல்லற வாழ்க்கையில் அமைதியையும் இன்பத்தையும் உண்டாக்குவாள். "ஏர் பிடித்தவன் என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கியம்' என்ற பழமொழிக்கு என்ன என்னவோ அர்த்தம் சொல்வார்கள். சம்பாதிக்கிறவனுடைய வரும்படியை அறிந்து இல்லறத்தை நடத்தத் தெரிந்தவளால்தான் வாழ்க்கை இன்பம் உண்டாகிறதென்ற கருத்தையே அப்பழமொழி சொல்லுகிறது. குடும்ப பாரத்தை வகிக்கும் திறமை அவளிடம் இருப்பதனால் தான் அவளுக்கு "விறல் மந்திரி மதி" வேண்டுமென்று ஒரு பழைய பாட்டுச் : சொல்லுகிறது. வீட்டு ராஜ்யத்திலே அவள்தான் பொக்கிஷ மந்திரி.