பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கேத சம்பாஷனை

65

கையில் விசிறியும் பிடித்திருப்பார் பாதக் குறட்டின் மேல் கடந்து செல்வார். அவருடைய முகத் தோற்றத்தால் அந்த அழகிய பெண்ணுக்கு அவர் தகப்பனராக இருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

அழகியின் எழிலிலே ஈடுபட்ட ஆடவன் அவள் தகப்பனாரையும் பார்த்தான். அவர் வராத நாளில் எப்படியாவது அவ்வணங்கினிடம் தன் காதலைத் தெரிவித்துவிட வேண்டுமென்ற வேகம் அவனுக்கு உண்டாயிற்று.

காதல் உடையவர்கள் வெளிப்படையான பாஷையில் பேசினல் ரஸம் இராது. காதலுக்குப் பாஷையே இல்லை. வெறும் குறிப்புக்களால் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுதான் காதற் பிரபஞ்சத்தின் சம்பிரதாயம். அதற்கு மேலே போனால் குறிப்பான பேச்சால் சில வார்த்தைகளைக் கொண்டு பல செய்திகளைத் தெரிவிப்பதுதான் காதல் உலகத்து மொழி.

ஆடவன் அவளை என்ன கேட்டது, எப்படிக் கேட்பது என்ற விஷயங்களே நன்றாக ஆலோசித்தான். " நான் உன் மேல் ஆசைப்படுகிறேன்; உனக்கு என் மேல் ஆசை உண்டா இல்லையா?" என்று கேட்கலாமா? அது வியாபாரிகளின் பாஷை அல்லவா? காதலில் பேச்சு வெறும் வியாஜமாகத்தான் இருக்க வேண்டும். ஒருவிதமாக அவன் இன்னது பேசுவது என்று தீர்மானம் செய்து கொண்டான்.

அவள் நல்ல வேளையாக அன்று தனியே வந்தாள். அதைக் கண்டவுடன் அவனுக்கு ஊக்கம் உண்டாயிற்று. " இதுவும் நல்ல சகுனந்தான்” என்று எண்ணிக் கொண்டான். மெல்ல அவளைப் பின் தொடர்ந்தான்.

கடைவீதிக் கூட்டத்தில் அவளே வெளிப்படையாக அழைத்துப் பேசலாமா? அவள் நாணத்தை விட்டு விட்டுப் பதில் சொல்லுவாளா? எல்லாம் சங்கேத

5