பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கேத சம்பாஷணை

69

புதிய கிராமம் ஒன்றை அடைந்து ஒரு பிராமணர் விட்டு வாசல் திண்ணையில் அவர் உட்கார்ந்தார். அது யாரோ ஏழை ஒருவருடைய குடிசை. மிகவும் களைப்போடு உட்கார்ந்து, “யாரப்பா குழந்தை, கொஞ்சம் தீர்த்தம் கொண்டுவா அப்பா” என்று கேட்டார். உள்ளே இருந்து வீட்டுக்காரப் பிராமணன் வெளியே வந்து அவரைக் கண்டு தீர்த்தங் கொடுத்துப் பேசலானன். பேச்சினிடையே, வந்த பிராமணர் கல்யாணம் செய்துகொள்ளும் விருப்பம் உடையவர் என்பதை ஏழைப் பிராமணன் தெரிந்து கொண்டான். அவனுக்கு வயசு வந்த பெண் ஒருத்தியும், ஒரு பிள்ளையும் இருந்தனர். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்யும் சக்தி இல்லாமல், யாராவது இரண்டாங்தாரமாகப் பண்ணிக் கொண்டால் கொடுத்துவிடலாமென்றெண்ணி அதற்கு ஏற்ற சமயத்தை எதிர்பார்த்திருந்தான். காசிவாசிப் பிராமணரைக் கண்டவுடன் தெய்வமே அவரைக் கொண்டு வந்து விட்டதாக எண்ணினான்.

கல்யாணப் பேச்சு ஆரம்பமாயிற்று, கல்யாணம் செய்வதென்ற தீர்மானமும் ஆயிற்று.-

அந்த வீட்டில் ஒரு கிழவி இருந்தாள். அவள் பழைய சமாசாரமெல்லாம் தெரிந்தவள். மாப்பிள்ளையாக வரப்போகிற பிராமணரை அவள் உற்று உற்றுக் கவனித்தாள். அவரை என்னவோ கேட்க வேண்டுமென்று அவள் துடித்தாள்.

பிராமணர் திண்ணையில் இருந்தார். சமையல் ஆன பிறகு அவரை உள்ளே அழைத்து வரும்படி அந்தக் கிழவி, வீட்டுக்காரனுடைய சிறு பிள்ளையை அனுப்பினாள். “நீ போய் அவரைச் சாப்பிடக் கூப்பிடு. இந்தப்பாட்டைச் சொல்லிக் கூப்பிடு” என்று சொல்லி அனுப்பினாள். அவனும் அப்படியே போய்ச் சொல்லிக் கூப்பிட்டான்.