பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கிழவன் விறகுச் சுமையைப் பட்டணத்திலே விற்றுவிட்டு மாலை நான்கு மணி வரையும் இளைப்பாறுவான்; நன்றாகத் தூங்கவும் செய்வான். பட்டணத்திலே ஓர் ஒதுக்கிடத்திலே இருந்த ஒரு பாழடைந்த சத்திரம் இதற்கு வசதியாக இருந்தது. அங்குதான் அவன் நாள்தோறும் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அங்கு வந்ததும், விறகுச் சுமையோடு அவன் கழுதை மேல் ஏற்றி வந்திருந்த பசும் புல்லை எடுத்து அதற்குப் போடுவான். பிறகு, மேல் வேட்டியை விரித்துச் சத்திரத்தில் படுப்பான். கழுதையை அவன் கட்டி வைப்பதில்லை. ஏனென்றால், அதுவும் புல்லைத் தின்றுவிட்டு அங்கேயே தரையில் படுத்துக் கொள்ளும். எங்கும் ஓடிவிடாது என்று அவனுக்குத் தெரியும்.

மாலை நான்கு மணிக்குக் கிழவன் எழுந்தவுடன் ஒரு மண் கலயத்திலே கொண்டு வந்திருந்த பழைய சோற்றை உண்பான். கழுதைக்கும் கொஞ்சம் வைப்பான். இந்தப் பழைய சோற்றுக்காகவும் அது அங்கேயே காத்துக் கிடக்கும்.

கிழட்டுக் குதிரை வந்த போனதிலிருந்து கடக்கிட்டி முடக்கிட்டியின் மனத்தில் பட்டணத்தைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் வளர்ந்துகொண்டே இருந்தது. மேலும், அந்தக் குதிரையை எங்காவது சந்திக்கலாம் என்ற நோக்கமும் அதற்கு உண்டாயிற்று.