பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

தடவிக் கொடுத்தான். “தெரியாமல் அடித்து விட்டேன்; வருத்தப்படாதே" என்று அன்போடு கூறினான்.

கடக்கிட்டி முடக்கிட்டி ஆறுதல் அடைந்தது. தனக்கு அடி விழுவதற்குக் காரணமாக இருந்த அந்த நான்கு திருடர்களையும் பழி வாங்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டது.

அடுத்த ஒரு வாரத்திற்குத் திருடர்கள் நான்கு பேரும் சத்திரத்தில் தலை காட்டவில்லை. அதற்குப் பிறகு ஒரு நாள் வந்தார்கள். வழக்கம் போலப் பாசாங்கு செய்ய எண்ணி நான்கு பேரும் படுத்தார்கள். அவர்களில் இரண்டு பேர் நன்றாகத் தூங்கிவிட்டார்கள். குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டது.

அந்தச் சமயத்தில் தான் கிழவன் அன்று கொண்டுவந்த விறகை விற்றுவிட்டு ஓய்வு கொள்ளுவதற்காகச் சத்திரத்திற்கு வந்தான். இப்பொழுதெல்லாம் அவன் பணத்தைத் தலை மாட்டில் வைப்பதில்லை. தன் இடுப்பு வேட்டியில் நன்றாக முடிந்து மடியில் செருகிக் கொண்டு படுத்துத் தூங்கலானான்.

கடக்கிட்டி முடக்கிட்டி, கிழவன் போட்ட பசும்புல்லைத் தின்றுகொண்டிருந்தது.

தூங்காமல் இருந்த மற்ற இரண்டு திருடர்களும் தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசத் தொடங்கினார்கள்.