பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

அதைக் குடித்துவிட்டுக் குடிசைக்குப் பக்கமாக வெளியே புல் மேயச் செல்லும். நன்றாக இருட்டும் வரையில் அது மேய்ந்து விட்டுக் குடிசைக்கு வந்துவிடும்.

குடிசைக்குப் பக்கத்தில் உள்ள காட்டிலே புலிகள் இருந்தன. அவற்றால் இந்தக் கழுதைக்கு ஏதாவது தீங்கு நேராமல் இருப்பதற்காகக் கிழவன் ஒரு தந்திரம் செய்தான். நல்ல செம்மண்ணாகப் பார்த்துக் கொண்டு வந்து தண்ணீரில் கரைத்தான். அதைக் கழுதையின் கால்களை விட்டுவிட்டு உடம்பு முழுவதும் நன்றாகப் பூசினான். பச்சைத் தழையைக் கசக்கிக் கழுதையின் கால்களுக்கும் முகத்திற்கும் பசேலென்று சாயம் தீட்டினான். இவ்வாறு செய்த பிறகு பார்த்தால் கழுதையின் உருவமே அடையாளம் தெரியாமல் மாறி விட்டது. ஏதோ ஒரு விநோதமான விலங்கு போல் அது காட்சி அளித்தது. சாயம் கொஞ்சம் மங்கும்போது மறுபடியும் அடித்து விடுவான்.

இவ்வாறு செய்தபிறகுதான் பயமில்லாமல் கழுதையை மேயவிட்டான். இருந்தாலும் கழுதை காட்டிற்குள் அதிகத்தூரம் செல்லாமலும், அதிக நேரம் இருட்டிலே வெளியில் இராமல் குடிசைக்கு வருமாறும் அவன் பழக்கி இருந்தான்.

இவ்வாறு கழுதைக்கு எவ்விதத் தீங்கும் வராமல் காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாள்