உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடற்கரையினிலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இளங்கோவடிகள்

9


எமது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை முன்னின்று ஆதரித்தவன் அவனே என்பதை நீ அறியாய் போலும்; கண்ணும் ஆவியுமாகத் தமிழ் அன்னையைப் போற்றினானே அம்மன்னன் ! பழந்தமிழைப் பண்ணுறத் தெரிந்து ஆய்ந்து பசுத்தமிழ் ஆக்கினானே ! அவன் புகழை அறிந்து நீ அழுக்காறு கொண்டாயோ? அன்றி. உன் முத்துச் செல்வத்தை அவன் வளைத்து வாரிக் கொண்டான் என்று வன்கண்மை யுற்றாயோ?

" கடுமை வாய்ந்த கருங் கடலே ! மண்ணாசை உன்னையும் விட்டபாடில்லையே ! மண்ணைத் தின்றுதான் தீரவேண்டுமென்றால், பண்பு வாய்ந்த எங்கள் பாண்டிநாடுதானா உன் கண்ணிலே பட்டது? விலங்கினம் போன்ற வீணர் வாழும் நாடுகளை நீ விழுங்கலாகாதா? நெஞ்சாரப் பிறரை வஞ்சித்து வாழும் தீயவர் நாட்டை நீ தின்று ஒழிக்கலாகாதா? பிற நாட்டாரது உரிமையைக் கவர்ந்து, அவரை அடிமை கொள்ளும் பேராசைப் பேயர்கள் வாழும் நாட்டைப் பிடித்து உண்ணலாகாதா? நிறத் திமிர் கொண்டு அறத்தை வேரறுக்கும் வெறியர் வாழும் நாட்டை நீ அழித்து முடித்தலாகாதா? 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற பரந்த உண்மையைப் பறைசாற்றிய எங்கள் தமிழ் நாடா உன் மனத்தை உறுத்தியது? மன்னுயிரை யெல்லாம் தம்முயிர் போல் கருதிய முனிவரும் மன்னரும் வாழ்ந்த எங்கள் தமிழகமா உன் கருத்தை வருத்தியது? நாடி வந்தவர்க்கெல்லாம் நாடளித்து, வாடி வந்தவர்க்கெல்லாம் விருந்தளித்து, அறநெறியில் நின்ற எங்கள் அருமைத் திருநாடா உன் பேய்ப்பசிக்கு இரையாக வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/11&oldid=1247504" இலிருந்து மீள்விக்கப்பட்டது